தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள முனி! - பேராயருக்கு ஏற்பட்டுள்ள மனக்கவலை (Video)
கொழும்பு - பொரள்ளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் குண்டு வைக்கப்பட்டதன் பின்னணியில் பாரிய சூழ்ச்சி காணப்படுவதாகவே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கருதுவதாக, பேராயர் இல்லத்தின் தகவல் தொடர்பு மையத்தின் பணிப்பாளர் ஜுட் கிரிசாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிரு தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள உண்மைகளை மறைப்பதற்கு முயற்சிக்கும் ஒரு செயற்பாடாகவே பேராயர் இல்லம் இதனை பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொரளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் குண்டு மீட்க்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முனி என்ற நபரை பார்வையிடுவதற்காக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
பேராயர் உட்பட அருட்தந்தையர்கள் பலரும் குற்றத்தடுப்பு பிரிவிற்கு விஜயம் செய்த போது, அவ் வளாகத்தில் அதிகளவான காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
குறித்த நபரை பார்வையிட்டு வெளியேறிய கர்தினால் ஊடகங்களுக்கு எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை, எவ்வாறிருப்பினும் பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
“கர்தினால் இன்று பொரள்ளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டை முதலில் கண்டு பிடித்த முனி என்ற நபரை பார்ப்பதற்காக கொழும்பு குற்றப் பிரிவிற்கு வருகைத்தந்தார். சிறைக்கைதிகளை பார்வையிடுவது கத்தோலிக்கர்களாகிய எங்களுக்கு மிகவும் புண்ணிய செயல் ஆகும்.
இந்த முனி என்ற நபர் தான் அன்று பொரள்ளை சகல புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டை முதலில் கண்டுபிடித்தார். அன்று நடக்கவிருந்த பாரிய சேதத்தை, மனித படுகொலைகளை தடுத்தவர் அவர்.
அவர் தொடர்பாக பேராயர் அவர்களுக்கு மனதில் ஒரு கவலை உள்ளது. நாம் எதிர்பார்த்தோம் இவரையும் நீதிமன்றில் விடுவிப்பார்கள் என்று. அனாலும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. ஏனைய மூவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்கள் மூவரையும் விடுவித்தமைக்காக நாம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இருந்தாலும் முனி என்ற நபரை நாம் உயரிய விதத்தில் பார்க்கவேண்டும் காரணம் அன்று இடம்பெறவிருந்த அழிவை தடுத்த ஒரு நபர் அவர். இன்று அவருக்கும் விடுதலை கிடைக்கும் என்று பேராயர் எதிர்பார்த்தார். அந்த கைக்குண்டானது யாரும் தனிப்பட்ட நோக்கத்திற்க்காக வைத்த குண்டு அல்ல.
அதையும் தாண்டி இதன் பின்னால் ஒரு பாரிய சூழ்ச்சி உள்ளது. உயிர்த்த ஞாயிரு தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள உண்மைகளை மறைப்பதற்கு முயற்சிக்கும் ஒரு செயற்பாடாகவே நாம் பார்க்கின்றோம்.
அதேவேளை உயிர்த்த ஞாயிரு தாக்குதல் இடம்பெற்று 1000 நாட்களை நினைவு கூறும் வகையில் இடம்பெற்ற சிறப்பு ஆராதனையை குழப்பும் நோக்கிலும், எம் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் யாரோ ஒருவரால் செய்யப்பட்ட ஒரு செயல் தான் இதுவா? எமக்கு இதில் பாரிய சந்தேகம் உள்ளது என்பதே பேராயர் நாட்டு மக்களுக்கு விடுக்கும் செய்தி.