பிரித்தானியர்கள் விடுமுறைக்கு பயணிப்பதற்கான நாடுகளின் பட்டியல் வெளியானது!
போர்ச்சுகல், ஜிப்ரால்டர் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் பிரித்தானியர்கள் விடுமுறைக்கு பயணிப்பதற்கான நாடுகளின் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் 17ம் திகதி முதல் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளது.
இதன்படி, பச்சை நிற பட்டியலில் உள்ள நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள், திரும்பி வரும்போது தனிமைப்படுத்தத் தேவையில்லை, வருகைக்குப் பிந்தைய ஒரு கோவிட் சோதனை மட்டும் செய்துகொள்ளபட வேண்டும்.
செம்மஞ்சள் நிற பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் 10 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்த வேண்டும், அவர்கள் திரும்புவதற்கு முன் இரண்டாம் மற்றும் எட்டாம் நாளில் கோவிட் சோதனை செய்துகொள்ள வேண்டும்.
சிவப்பு நிற பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து வரும் மக்கள் 1,750 பவுண்ட் செலவில் அங்கீகரிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அத்துடன், அவர்கள் புறப்படுவதற்கு முன் இரண்டாம் மற்றும் எட்டாம் நாளில் கோவிட் சோதனை செய்துகொள்ள வேண்டும். துருக்கி, மாலைத்தீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
பச்சை நிற பட்டியலில் இருக்கின்ற போதிலும், பிரித்தானயர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விடுமுறைக்கு செல்ல முடியாது.
மேலும் பிரித்தானியர்கள் பெரிதும் விரும்பும் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் செம்மஞ்சள் நிற பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளன.
பச்சை நிற பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள நாடுகளின் விபரங்கள்.....
ஜிப்ரால்டர், இஸ்ரேல், போர்ச்சுகல், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, புருனே, ஐஸ்லாந்து, ஃபாரோ தீவுகள், டிரிஸ்டன் டா குன்ஹா, செயின்ட் ஹெலினா, அசென்ஷன், பால்க்லேண்ட் தீவுகள், சிங்கப்பூர், தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள்