கடற்படை முகாமில் மகிந்த! திருகோணமலையின் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டது
திருகோணமலை நகரத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரம் முழுவதும் இராணுவ மற்றும் பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச திருகோணமலை கடற்படை முகாமிற்கு வருகைத் தந்த தினத்திலிருந்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வீதிக்கு வீதி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் இருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக வீதிக்கிறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அது அரசியலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியதுடன் அமைதியான போராட்டம் வன்முறைகளாக மாற்றம் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த திங்கட் கிழமை வன்முறைகள் அதிகரித்த நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து மறுநாள் செவ்வாய்க்கிழமை உலங்குவானூர்தி ஒன்றின் ஊடாக அவர் திருகோணமலை கடற்படை முகாமிற்கு சென்று தங்கியிருந்த நிலையில், அங்குள்ள மக்கள் திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மறுதினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன, பாதுகாப்பு காரணங்களுக்காக மகிந்த ராஜபக்ச திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திருந்தார்.
இந்தநிலையில் அன்றிலிருந்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


