முல்லைத்தீவில் பேசு பொருளாகியுள்ள தாயொருவரின் மகத்தான செயல்
தன்னுடைய பிள்ளைக்கு இருக்கும் பிரச்சினையில் இருந்து அவரை காத்துக்கொள்ள கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைத்து நீண்ட தூரம்(50 கிலோமீட்டர்) கால்நடையாக சென்ற தாயொருவர் பேசு பொருளாகியுள்ளார்.
தாய்ப்பாசம் தரணியில் மகத்துவமான ஒன்றாக இருப்பது மீண்டுமொரு முறை யாதார்த்தப்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது.
காணாமலாக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளுக்காக நித்தம் போராடிவரும் ஈழத் தாய்மார்களின் போராட்டம் தாய்ப்பாசத்தின் நீண்ட நெடிய தாகத்தினை எடுத்தியம்பியவாறு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பெற்ற பிள்ளைகளுக்காக வலிகளை சுமந்து சுகமாக எண்ணும் பெற்றோரை வயதான இறுதிக் காலங்களில் முதியோர் இல்லங்களில் தவிக்க விடுதல் கவலைக்குரிய விடயமாகும் என இத்தாயின் முயற்சி பற்றி பேசிய சமூகவிட ஆய்வாளர் வரதன் சுட்டிக் காட்டுவதும் நோக்கத்தக்கது.
மாங்குளத்தில் இருந்து அளம்பில் ஆறாம் கட்டை வரை
மாங்குளத்தில் வசிக்கும் இவரின் முதல் நாள் பயணம், மாங்குளத்தில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கிய பயணமாக அமைந்திருந்தது. ஒன்பதாம் கட்டை வரை பயணித்தவர் முதல் இரவை ஒரு கடையில் தங்கி நாளை கழித்து விட்டு இரண்டாம் நாள் தன் பயணத்தினை ஆரம்பித்து முள்ளியவளை வரை சென்றடைந்துள்ளார்.
வழித் துணைக்கு தன் பிள்ளைகள் வருவதாக குறிப்பிட்ட அந்த தாய் தன் மூன்றாம் நாள் பயணத்தின் மூலம் அளம்பில் ஆறாம் கட்டை முருகன் கோவிலைச் சென்றடைந்துள்ளார்.
அடுத்த நாளான 14.05.2024 அன்றைய நாளின் திருவிழா தங்களுடையது எனவும் அந்த நாளில் தன் பிள்ளைக்காக நேர்த்திக்கடனைச் செய்யவுள்ளததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாங்குளத்தில் இருந்து முள்ளியவளை தண்ணீரூற்று ஊடாக பயணித்துள்ளார் இந்த தாய். அதன் பின்னர் குமுழமுனை வீதியூடாக முறிப்புவரை சென்று உடுப்புக்குளம் ஊடாக முல்லைத்தீவு அளம்பில் வீதியை அடைந்து, அளம்பில் ஆறாம் கட்டை முருகன் கோவிலைச் சேருவதாக அவரது திட்டமிடல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வன்னியில் அதிகளவான வெப்பம் நிலவிவரும் இன்றைய காலப்பகுதியில் இது ஒரு தியாக உணர்வின் வெளிப்பாடு என அளம்பில் பகுதியைச் சேர்ந்த ஆன்மிக ஈடுபாட்டாளர் ஒருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
ஆலயத் திருவிழா
நீண்ட பாரம்பரியமிக்க முருகன் கோவிலாக ஆறாம் கட்டை முருகன் கோவில் இருக்கின்றது.
முல்லைத்தீவில் உள்ள பழைமையான முருகன் ஆலயங்களில் இதுவும் ஒன்றென ஆலயம் சார்ந்த ஒருவரின் கருத்தாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
12 நாட்களைக் கொண்ட திருவிழாவினை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்தர்கள் தங்களுடைய பொறுப்பில் எடுத்து செய்துவருவதாகவும் மற்றொரு பக்தர் குறிப்பிட்டார்.
தன் பிள்ளைக்காக நடந்து சென்று நேர்த்திக்கடன் செய்துகொள்ளும் எண்ணத்தோடு செயற்பட்ட தாய் குறிப்பிடும் போது அளம்பில் கனேடியன் வீதியை பிறப்பிடமாகவும் திருமண வாழிடமாக மாங்குளத்தினையும் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.
அளம்பில் கனேடியன் வீதிக்கு அருகில் ஆறாம் கட்டை முருகன் கோவில் இருக்கின்றது.
மடு மாதா கோவிலுக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்நிற்கும் கால் நடையாக நடந்து சென்று நேர்த்திக்கடன்கள் செய்வது வழமையான போதும் அளம்பில் ஆறாம் கட்டை முருகன் கோவிலுக்கு இத்தகைய ஒரு நேர்த்திக்கடன் செய்தல் இது முதல் தடவையாக இருக்கும் என தான் எண்ணுவதாகவும் முருகன் ஆலய பக்தர் ஒருவர் குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது.
பிள்ளை மீது ஏற்பட்ட பாசம்
மாங்குளத்தில் இருந்து மல்லாவி போகும் வழியில் ஒரு கிலோமீற்றரிலும் சற்றுக் கூடிய தூரத்தில் இருக்கும் தன் வீட்டில் இருந்து முல்லைத்தீவு அளம்பில் ஆறாம் கட்டை முருகன் கோவில் வரை கால் நடையாக சென்று நேர்த்திக்கடன் செய்துள்ளார்.
மதிய நேரத்தில் காபைற் வீதி வழியே வெறும் கால்களுடன் தாயொருவர் நடந்து செல்வதை கண்ணுற்று அவருக்கு உதவிடச் சென்ற போது தான் அவர் தன் நேர்த்திக்கடன் பற்றி பேசியிருந்ததாக சமூகவிட ஆய்வுகளில் ஆர்வம் காட்டிவரும் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறே தண்ணீரூற்று குமுழமுனை வீதியில் பயணித்த மற்றொரு பயணியும் தன் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டிருந்தார். பாதணிகள் இல்லாது வெய்யில் நேரத்தில் காபைற் பாதை வழியே நடந்து செல்லும் போது ஏற்படும் துயரத்தினை எண்ணி அவரை போகும் இடம் கூட்டிச் சென்று விடலாம் என தான் எண்ணியதாக குறித்த பயணி குறிப்பிட்டார்.
அந்த தாயாரைப் பார்க்கும் போது தனக்கு தன் தாயைப் பார்த்தது போன்ற உள்ளுணர்வு தூண்டப் பெற்றிருந்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பெற்றோரை போற்றி வாழும் மனிதர்கள் இன்னமும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுவதாக இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த ஒய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
தான் இப்போதும் தன் பெற்றோர் மீது அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பதாகவும் அந்த இயல்பை தன் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்பதாகவும் அது பேரப்பிள்ளைகளுக்கும் பழக்கப்படுத்தப்படும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வயதான தன் பெற்றோருக்கு தேவையானவற்றை அவர்களது விருப்பு வெறுப்புக்கேற்ப செய்து கொடுப்பது தன் கடமையெனவும் அது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தமையும் இங்கே நோக்கத்தக்கது.
செம்மலையில் ஒரு சமூகம்
பெற்றோருக்கு மதிப்பளித்து முன்மாதிரியாக செயற்பட்டு வந்த சமூகம் ஒன்று முல்லைத்தீவு செம்மலையில் இருப்பதாக கவிஞர் நதுநசி குறிப்பிட்டிருந்தார்.
மூத்த ஈழ எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கும் மணலாறு விஜயனும் அவரது சகோதரர்களும் தங்கள் பெற்றோரை மதித்து முன்மாதிரியாக செயற்பட்டிருந்ததை தான் கண்கூடாக நடைமுறையில் பார்த்ததாகவும் அதனை தான் முன்மாதிரியாக கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பெற்றோர் தங்கள் வீட்டில் வாழ்ந்து வந்திருந்தனர். அவர்களது பிள்ளைகள் பெற்றோரின் வீட்டினைச் சூழவுள்ள செம்மலைக் கிராமத்தில் பரந்து வாழ்ந்திருந்தனர்.
ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் பெற்றோரின் வீட்டுக்கு பிள்ளைகள் சென்று அவர்களோடு ஆறுதலாக உரையாடி வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அவ்வாறு செல்லும் போது பேரப்பிள்ளைகளையும் வருமக்களையும் அழைத்துச் செல்வதுண்டு என தன் அவதானத்தினை அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.
பெற்றோரை அவர்கள் விரும்பும்படி விருப்பமான இடத்தில் வாழ விட்டு அவர்களுக்கு உதவியாகவும் ஆறுதலாகவும் இருப்பதே பிள்ளைகளின் பொறுப்பான நடத்தையாகும்.
இத்தகைய நடத்தையினை இப்போதும் செம்மலையின் பல குடும்பங்களில் அவதானிக்க முடிகின்றது. பெற்றோரை மதித்துப் போற்றும் பிள்ளைகளை அதிகம் கொண்ட கிராமம் செம்மலை காணப்படுகிறது.
முதியோர் இல்லங்களில் வயதான பெற்றோர்
தன் பிள்ளைக்காக நீண்ட தூரத்தினை கால்நடையாக நடந்து சென்றிருந்த அந்த அம்மாவின் கால்கள் கொப்பளம் போட்டிருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது.
தாயானவளுக்கு இந்த துயரம் சுகமானதாக இருந்திருக்கும். விரும்பி ஏற்று செய்யும் ஒன்று சுமையாக இருப்பதில்லை. அந்த செயல் நேர்த்திமிக்கதாக இருக்கும் என்பது அனுபவத்தின் உணர்த்தல் ஆகும்.
இலங்கையில் பல இடங்களிலும் முதியோர் இல்லங்கள் தோன்றி நிலைத்து தொடர்ந்து வருகின்றன. அங்கெல்லாம் வாழ்ந்து முடித்தவர்கள் தங்கள் இறுதிக் காலங்களை கழித்து வருகின்றனர். இவ்வுலக வாழ்வை முடிக்கும் அந்த இறுதி நொடிக்காக என விவரிக்கப்படும் முதியோர் இல்லங்களில் வாழும் பெற்றோர்களின் மனதின் வலி கனதியானது.
பிள்ளைகளோடு வயதான பெற்றோர்களும் சேர்ந்து ஒன்றாக வாழ்வதால் அவர்களிடம் இருந்து பேரப்பிள்ளைகள் அனுபவத்தினைக் கற்றுக் கொள்ள வயதான பெற்றோர்கள் நல்ல அனுபவப் புத்தகமாக அமைந்துவிடுவார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட்டால் முதியோர் இல்லங்கள் தேவையில்லாது போய்விடும் என்பது திண்ணம்.
முதியோர் இல்லங்களில் பெற்றோரை விட்டுச் செல்லும் பிள்ளைகளின் நடத்தைக்கோலம் பற்றி கவிஞரும் பெண்ணியல்வாதியுமான உடுவிலூர் கலாவும் விழிப்புணர்வுக் கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதும் இங்கே நோக்கத்தக்கது.
பிள்ளைகளுக்காக அளப்பரிய தியாகங்களைச் செய்யத் துணிந்த பெற்றோருக்கு அவர்களின் வயதான காலங்களில் அவர்களுக்கு உதவியாகவும் ஆறுதலாகவும் இருக்கக்கூடிய எதிர்கால சமூகத்தினை கட்டியெழுப்புதல் நல்லதொரு ஈழத்தமிழ் சமூகம் தோற்றம் பெற வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |