பாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு சடலத்தைக் காட்டில் வீசிய பேரன் கைது! - களுத்துறையில் கொடூரம்
பாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு சடலத்தைக் காட்டுக்குள் இழுத்துச் சென்று போட்டார் என்று கூறப்படும் 24 வயதான பேரனை கைது செய்துள்ளதாகக் களுத்துறை, பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுரலிய பிரதேசத்தில் வசித்து வந்த லீலாவதி விக்கிரமசிங்க என்ற 67 வயதுடைய பெண்மணியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் வாக்குமூலம்
கொலை செய்யப்பட்ட பெண்மணி, கொலைச் சந்தேகநபர் வசித்து வந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் தனது தாயாருக்குத் தொந்தரவு கொடுத்த காரணத்தால் இந்தக் கொலையைத் தான் செய்துள்ளார் என்று சந்தேகநபர் விசாரணையின் போது வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்மணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வீட்டுக்கு வந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
பாட்டியின் சிகிச்சைகளுக்காகத் தாயின் பணம் செலவிடப்படுவதால், ஆத்திரமடைந்து சந்தேகநபர் இந்தக் கொலையைச் செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு மதுபானம் அருந்தி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ள சந்தேகநபர், தனது பாட்டியின் கழுத்தைக் கத்தியால் அறுத்து விட்டு, சடலத்தை அருகில் உள்ள காட்டுக்குள் இழுத்துச் சென்று போட்டுள்ளார்.
சந்தேகநபர் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.