மாணவர்களின் பட்டப்படிப்புக்கு வட்டியற்ற கடன் திட்டம்! ஆர்வம் அற்ற நிலையில் வடக்கு கிழக்கு மாணவர்கள்
அரசாங்கம் மாணவர்கள் பட்டப்படிப்பு ஒன்றினை நிறைவு செய்வதற்காக வட்டியற்ற கடன் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது எனவும் வடக்கு கிழக்கில் உள்ள மாணவர்கள் அதிகமாக இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வவுனியா தனியார் IAPS பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் நாசிம் செயட் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
கல்வி அமைச்சின் நிதி உதவியில் மாணவர்கள் பட்டப்படிப்பு ஒன்றினை நிறைவு செய்துகொள்வதற்காக வட்டியற்ற கடன் திட்டம் ஒன்றினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் காலாவதியாகவுள்ளது. இந் நிலையில் வடக்கு கிழக்கு மாணவர்கள் அதிகமாக இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
கடந்த நல்லாட்சிக் காலத்தில் க.பொ.த உயர் தரப்பரீட்சை எழுதி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகாத மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று உருவாக்கப்பட்ட ஒரு செயற்றிட்டம் எங்களுடைய வடக்கு கிழக்கு மாணவர்கள் மத்தியில் சென்றடையவில்லை என்ற விடயம் மிகவும் கவலைக்குரியது.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற தனியார் பல்கலைக்கழத்தின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது இவ்விடயம் தொடர்பில் எனக்கு தெரியப்படுத்தினார்கள் . கடந்த ஆறு வருடமாக இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இத் திட்டத்தில் கண்டி, கொழும்பு போன்ற பகுதிகளில் வசிக்கும் மாணவர்களே அதிகளவில் பயனடைந்து வருகின்றார்கள். இச் செயற்றிட்டம் குறித்து தெளிவான விபரங்கள் எவையும் மாணவர்களிடம் சென்றடையவில்லை. அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்ட போதிலும் எமது மாணவர்களிடம் இச் செயற்றிட்டம் சென்றடையவில்லை.
கடந்த 2018 , 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சை எழுதி சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படாமல் இருக்கும் மாணவர்கள் அவர்களின் பட்டப்படிப்பு கனவை நிறைவு செய்வதற்காக அரசாங்கம் எட்டு இலட்சம் ரூபா முதல் ஆறு இலட்சம் ரூபா வரை பெறுமதியான வட்டி அற்ற கடன் வசதித்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இலங்கையிலுள்ள முன்னணி தனியார் பல்கலைக்கழகங்கள் ஊடாக இச் சந்தர்ப்பங்களை வழங்கி மேற்கொண்டு வருகின்றது. இதற்கு மாணவர்கள் எந்தவிதமான ஒரு கட்டணத்தையும் செலுத்த வேண்டிய தேவை இல்லை.
நான்கு வருட கற்றல் நடவடிக்கையை பூர்த்தி செய்த மாணவர்கள் ஒரு வருடத்தில் வேலைவாய்ப்பு ஒன்றினை தேடிக் கொள்வதற்கான காலப்பகுதியையும் எடுத்துக்கொள்வதுடன் வேலைவாய்ப்பு ஒன்றினை பெற்றுக்கொண்டால் அக் கடன் திட்டங்களை மீள செலுத்திக்கொள்ள முடியும்.
கொழும்பில் இப்பாட நெறிகள் நடைபெறுவதால் அரசாங்கம் மேலதிகமாக வருடம் ஒன்றிற்கு எழுபத்தையாயிரம் ரூபாய்களையும் போக்குவரத்து உட்பட இதர செலவுகளுக்காக கடன் அடிப்படையில் மேலும் வழங்கப்படுகின்றது.
இவ்வாறான ஒரு பெரிய சந்தர்ப்பத்தை எமது மாணவர்களுக்கு வழங்கியபோதிலும் எமது மாணவர்கள் மத்தியிலும் கல்விச்சமூகத்தினரிடமும் இச் செயற்றிட்டம் சென்றடையவில்லை.
யுத்தம் காரணமாக எமது மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களின் பெயருக்குப்பின்னால் ஒரு பட்டப்படிப்பை இணைத்துக்கொள்வது என்பது அதிக மாணவர்களின் கனவாக இருக்கின்றது.
குறிப்பிட்ட ஒரு சில மாணவர்களே பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்றார்கள். ஏனைய மாணவர்களுக்கும் இச்சந்தர்ப்பம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் எமது தனியார் பல்கலைக்கழகம் இச் செயற்றிட்டத்தை மாணவர்களிடம் கொண்டு செல்வது எமது தார்மீகப் பொறுப்பாக இருக்கின்றது.
இது குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள 0773377350 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் மேலும் தெரிவித்துள்ளார் .