நினைவேந்தல்களை தடுக்க அரசாங்கத்துக்கு அனுமதி இல்லை: அநுர தரப்பு சுட்டிக்காட்டு
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுக்கூர அரசாங்கம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது என்பதுடன், தடைகளை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு அனுமதியும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(26.11.2024 அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதில் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களை நினைவுக்கூர அரசாங்கம் அனுமதித்துள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்க வர்த்தமானி
இது குறித்து நளிந்த ஜயதிஸ்ஸமேலும் தெரிவித்துள்ளதாவது”
“2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அரசாங்கம் வெளியிட்டிருந்த வர்த்தமானியின் பிரகாரமே செயற்படுவோம்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெளிவாகக் கூறியுள்ளார். பயங்கரவாத அமைப்பையோ அல்லது அதன் உறுப்பினர்களை நினைவுக்கூரவோ இடமளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறவில்லை.
பயங்கரவாத மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பு
குறித்த வர்த்தமானியின் பிரகாரம் பயங்கரவாத மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளையோ அல்லது அதன் உறுப்பினர்களையோ நினைவுக்கூர முடியாது.
அதேபோன்று குறித்த அமைப்புகளுக்காக நிதி சேகரித்தல், பிரச்சாரம் செய்தல், ஒருங்கிணைத்தல், கொடிகளை பயன்படுத்தல், சின்னங்களை பயன்படுத்தல், பாடல்களை பயன்படுத்தல் என அனைத்து விடயங்களும் இதன் ஊடாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணிகளின் பிரகாரம்தான் அரசாங்கம் செயல்படும். இந்த விடயத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மிகவும் தெளிவாக ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
ஆனால், உயிரிழந்த தமது உறவுகளை நினைக்கூர அனைவருக்கும் உரிமை உண்டு. இதற்கு தடையை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு அனுமதியில்லை” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,
புதுக்குடியிருப்பு
தாயக விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த வீரமறவர்களைப் போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்புப் பணிகள் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நடைபெற்றுள்ளன.
அந்தவகையில் மாவீரர்களை நாளை புதன்கிழமை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப் புதுக்குடியிருப்பு நகர் பகுதி தயார் நிலையில் இருக்கின்றது.
பெற்றோர் கெளரவிப்பு
மேலும், மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்களை கெளரவப்படுத்தும் நிகழ்வு இன்றையதினம் அராலி சிறீமுருகன் சனசமூக நிலையத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், தமது இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.
அத்தோடு, கிளிநொச்சி நடமாடும் வியாபாரி ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிறந்த தினத்தை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |