வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி
வவுனியா மாவட்டத்தின் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் கடந்த மாதம் இனம் காணப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஆடைத்தொழிற்சாலை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வவுனியாவிலுள்ள ஹைராமனிக், ஒமேகாலைன் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா ஆடை தொழிற்சாலையில் சுமார் 3000 க்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பணியாற்றி வருகின்றார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவர்களுக்கான கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் முதற்கட்ட செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆடை தொழிற்சாலை மீண்டும் இயங்குவதாயின் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் ஊழியர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து வந்திருந்தனர். இந்நிலையில் இன்றையதினம் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தடுப்பூசி ஏற்றுகின்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை,வவுனியா, மூன்றுமுறிப்பு ஆடைத்தொழிற்சாலையில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் செய்தியை அறிக்கையிடச் சென்ற தமிழ் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் மூன்றுமுறிப்பு மற்றும் இராசேந்திரங்குளம் பகுதிகளில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு இராணுவத்தினர் ஊடாக இன்று (24.06) கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
இதன்போது மூன்றுமுறிப்பு ஆடைத்தொழிற்சாலையில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை செய்தி அறிக்கையிட சென்ற தமிழ் ஊடகவியலாளருக்கு மாத்திரம் ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தின் செயற்பாடு பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அனுமதி மறுக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.