எரிபொருள் செலவு குறையுமா..! பொதுமக்களுக்கு அரசாங்கம் விடுத்த அதிரடி கோரிக்கை
இலங்கை தூய்மையான எரிசக்தி வளங்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், பொதுமக்கள் எரிபொருள் நுகர்வைக் குறைக்கவும், அதிக மின்சாரத் தேவை காணப்படும் நேரங்களைத் தவிர்க்கவும், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட அதிக எரிபொருள் சிக்கனமான வாகனங்களைப் பயன்படுத்தவும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக, எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவது மாத்திரம் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்த போதுமானதல்ல எனத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நுகர்வு
எரிபொருள் நுகர்வைக் குறைப்பதும் அதே அளவு முக்கியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“ஒரு நாடாக நாம் எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவதில் மட்டுமன்றி, எரிபொருள் நுகர்வையும் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பில் பொதுமக்களுக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முத்துராஜவெல பகுதியில் புதிய பெட்ரோலிய உட்கட்டமைப்பு நிர்மாணப் பணிகள் நேற்று(2) ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது எரிசக்தி மாற்றத்தை எதிர்கொண்டு வருவதாகவும், இந்த மாற்றத்தில் மின்சார வாகனங்களும் சூரிய மின்சக்தியும் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக மின்சாரத் தேவை காணப்படும் நேரங்களைத் தவிர்த்து, தமது எரிசக்தி பயன்பாட்டு முறைகளை மாற்றிக்கொள்ளுமாறும், மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்துவதுடன், எரிபொருள் சிக்கனமான மற்றும் மின்சார வாகனங்களை நோக்கி நகருமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத் திட்டத்தின் கீழ், 2029ஆம் ஆண்டுக்குள் தேசிய மின்வலையமைப்பில் மேலும் 1,200 மெகாவாட் சூரிய மின்சக்தியை இணைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
அரசாங்கத்தின் நோக்கம்
முத்துராஜவெலவில் புதிய Jet A-1 விமான எரிபொருள் குழாய் மற்றும் சேமிப்பு வளாகம், அத்துடன் மூன்று புதிய பெட்ரோலிய சேமிப்பு தொட்டிகள் அமைப்பதற்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Jet A-1 திட்டத்தின் கீழ், மொத்தமாக 92,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட ஐந்து சேமிப்பு தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.

மேலும், முத்துராஜவெல வளாகத்தையும் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தையும் இணைக்கும் வகையில் 21 கிலோமீற்றர் நீளமான நிலத்தடி குழாய் அமைப்பும் திட்டத்தில் உள்ளடங்குகிறது.
இதனிடையே, இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனம் (CPSTL) முத்துராஜவெலவில் மேலும் மூன்று சேமிப்பு தொட்டிகளை அமைத்து வருகின்றது. இதன் மூலம் நாட்டின் பெட்ரோலிய சேமிப்பு கொள்ளளவு மேலும் 40,000 கனமீற்றரால் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, எரிசக்தித் துறையில் அரசாங்கத்தின் வலுவான பங்களிப்பை தொடர்ந்து பேணுவதுடன், பொதுமக்களுக்கு திறன்மிக்க சேவையை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.