அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை ஒடுக்க முயற்சிக்கப்படுகிறது
அரசாங்கத்தை விமர்சனம் செய்பவர்களை ஒடுக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாக சர்வஜன பலய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் மதுர விதானகே இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் போர்வையில் அரசாங்கத்தினை விமர்சனம் செய்யும் இளைஞர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை அடக்கி ஒடுக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அரச பாதுகாப்பு மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல் விசாரணை என்ற அடிப்படையில் அரசாங்கம் இரண்டு சட்ட மூலங்களை கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த சட்ட மூலத்தின் உண்மையான நோக்கம் அரசாங்கத்தின் இயலாமையை சுட்டிக் காட்டுவோரை அடக்குவதாகும் என தெரிவித்துள்ளார்.
நீதிபதி அல்லது நீதிமன்றின் தலையீடு இன்றி சந்தேகத்தின் பேரில் நபர் ஓருவரை கைது செய்து தடுத்து வைப்பதற்கான சந்தர்ப்பம் பாரிய மனித உரிமை மீறலாக கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஆடை அலங்காரங்களின் அடிப்படையில் ஒருவரை கைது செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பது பொலிஸ் இராச்சியமொன்றை உருவாக்க வழியமைத்துவிடும் என மதுர விதானகே குறிப்பிட்டுள்ளார்.