வடக்கில் 5,940 ஏக்கர் நிலத்தை அரசு இரகசியமாகக் கபளீகரம்! சத்தம் சந்தடியின்றி வெளியானது வர்த்தமானி
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலய வீதி விடுவிப்பு மற்றும் காணி விடுவிப்பினை அரசு ஒருபுறம் முன்னெடுத்தவாறே மறுபுறம் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு அடையாளப்படுத்திய காணிகளை எதிர்வரும் முன்று மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால் அவை அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் மருதங்கேணி முதல் முள்ளிவாய்க்கால் வரை யாழ்ப்பாணம் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகியவற்றின் பெரும்பாலும் கடற்கரையோரப் பிரதேசங்களை அண்டி 5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தால் சத்தம் சந்தடியின்றி வெளியிடப்பட்டுள்ளது.
காணி நிர்ணய கட்டளைச் சட்டம்
எனினும் தமிழ் மொழியின்றி ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் மட்டும் காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் வர்த்தமானி அறிவிப்பு பிரசுரமாகியுள்ளது.
இதனிடையே யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
காணி விடுவிக்கும் நிகழ்வு இன்றையதினம் (01) முற்பகல்; யாழ் மாவட்ட செயலகத்தில் மூடப்பட்ட அறையினுள் இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத்தவினால் யாழ். மாவட்ட செயலாளர் பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.
ஆயினும் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட பொதுமக்களிற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. வலி வடக்கு வயாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும் மாங்கொல்லை பகுதியில் 15 ஏக்கரும் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் 5 ஏக்கர் காணி நிலமுமாக சுமார் 40 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கற்கோவளம் காணிகளை விடுவிக்ககோரி காணி உரிமையாளரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினையடுத்து நீதிமன்று அங்கிருந்த கடற்படையினரை வெளியேற உத்தரவிட்டுள்ளது.
யாழ். குடாநாட்டின் மருதங்கேணி
யாழ். குடாநாட்டின் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவு, கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளின் கடற்கரையோரங்கள் வழியாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் வரை இந்தப் பிரதேசங்கள் நீள்கின்றன.
இந்தப் பிரதேசங்களில் உள்ள நிலங்களில் அரச நிலம் எது, தனியார் நிலம் எது எனப் பிரதேச செயலகங்களுக்கோ அல்லது மாவட்ட செயலகங்களுக்கோ அடையாளம் தெரியாத காரணத்தாலேயே இவ்வாறான அறிவித்தல் வெளியிடப்படுவதாகவும் - மூன்று மாத காலப் பகுதிக்குள் தமது காணி என்று தனியார் ஆவணங்களைச் சம்ப்பிக்கும் பட்சத்தில் அந்த நிலங்களை விடுவித்து ஏனைய நிலங்கள் அரச நிலம் என 3 மாத நிறைவில் மீண்டும் ஒரு வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்படும் என அந்தப் பகுதிகளின் பகுதி பிரதேச செயலாளர்கள் பதிலளிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருக்கின்றமையாலோ அல்லது உயிரிழந்திருக்கின்றமையாலோ அந்த நிலங்களுக்கு உரிய காலத்தில் உரிமை கோராவிடின் அவ்வாறான நிலங்களையும் பொதுப் பயன்பாட்டு நிலங்களையும் அரச நிலங்களாக்கும் முயற்சியாகவே இது கருதப்படுவதாக அந்தப் பகுதிகளின் நில உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தப் பிரதேசங்களில் 500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை அரச காணிகளாகச் சுவீகரித்து பிற நாடு ஒன்றுக்கு வழங்க முயற்சி இடம்பெறுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியபோது அவ்வாறு எந்த முயற்சியும் இல்லை என அரசும் அதிகாரிகளும் மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
