மேல் மாகாணத்தில் 341 பொலிஸாருக்கு கோவிட் தொற்று
கோவிட் வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்ட பின்னர் மேல் மாகாணத்தில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் விசேட இடங்களில் கடமையாற்றிய 341 பொலிஸ் அதிகாரிகளுக்கு கோவிட் தொற்றியுள்ளது.
இதனை மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நிகழ்வில் தென்னகோன் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை இன்றைய தினம் 2 ஆயிரத்து 39 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையுடன் இலங்கை இதுவரை மொத்தமாக ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 750 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் இன்றைய தினத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 29 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மொத்தமாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 391 பேர் கோவிட் தொற்றினால் இருந்து குணமடைந்துள்ளனர்.