கோவிட் - 19 தடுப்பூசி சர்ச்சை! - பிரித்தானிய பிரதமரின் அறிவிப்பு
விரைவில் தான் கோவிட் - 19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளப் போவதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். அது நிச்சயமாக ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகாவின் தடுப்பு மருந்தாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் - 19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியது.
இந்த மருந்து பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. எனினும், குறித்த தடுப்பு மருந்தால் இரத்த உறைவு ஏற்படுவதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக குறித்த தடுப்பு மருந்தை பல்வேறு ஐரோப்பிய நாடுகள் நிறுத்தி வைத்துள்ளன.
எவ்வாறாயினும், ஒக்ஸ்போர்டின் தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்து ஒழுங்கு முறை ஆணையமும் அறிவித்துள்ளன.
இந்நிலையிலேயே, விரைவில் தான் கோவிட் - 19 தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளப் போவதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றில் பேசிய அவர், “விரைவில் நான் தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ள போகிறேன். இதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த தடுப்பு மருந்து நிச்சயமாக ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகாவின் மருந்தாக இருக்கும்.
அதைத்தான் நான் போட்டுக்கொள்ள போகிறேன்” என்றார்.
எவ்வாறாயினும், தடுப்பு மருந்தால் இரத்த உறைவு ஏற்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை போரிஸ் ஜோன்சன் நிராகரித்தார்.