அரசின் பிரதான கட்சி கூட்டணிக் கட்சிகளுடன் பேசியே முடிவுகளை எடுக்க வேண்டும் - துமிந்த திஸாநாயக்க
சர்ச்சைக்குரிய விடயங்களின் போதும் நாட்டில் தீர்க்கமான சந்தர்ப்பங்களிலும் , அரசாங்கத்தில் அதிக பலத்தை கொண்டு கட்சி ஏனைய கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கத்துடன் செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் ராஜாங்க அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் பிரதான கட்சி, தனக்கு ஆதரவளிக்கும் ஏனைய அனைத்து கட்சிகளுடன்கலந்துரையாடி அந்த கட்சிகளின் இணக்கத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும்.
அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்பை வகிக்காததன் காரணமாக விமர்சனங்களை முன்வைப்பது. பரஸ்பரம் கருத்துக்களை வெளியிடுவது.பல்வேறு அணிகள் உருவாவது போன்றவை நடக்கலாம்.
நாட்டுக்கான தீர்மானங்களை எடுக்கும் போது கூட்டணிக் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்தி, அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, முடிவுகளை எடுப்பதும், இணக்கப்பாட்டுக்கு வருவதும் பிரதான கட்சியின் பொறுப்பு.
எவ்வாறாயினும் அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகள் தமது நிலைப்பாடுகளை தனித்தனியாக வெளியிட்டாலும் அந்த கட்சிகள் அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்பை பாதுகாக்க வேண்டும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.