வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகள் குறித்து ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை..!
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள், அரச மருந்தகங்கள் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல் அடங்கிய பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மாகாண சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், நோயாளர்களும், வைத்தியர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சேவையை பெற்றுக் கொள்வதில் தாமதம் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய உயர் அதிகாரிகளின் தொடர்பு இலக்கங்கள் ஆகியன குறித்த பதாதையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார துறையினர்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்கள் அறிவித்தல் பதாதையில் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் எனவும், பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார துறை உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் சார்ள்ஸ் கூறியுள்ளார்.

அத்துடன் ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் “அபயம்” பிரிவின் தொலைபேசி இலக்கமும் அறிவித்தல் பதாதையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோயாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு, அவர்களுக்கான சேவையை உறுதிப்படுத்த சுகாதார துறையினர் மேலும் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலதிக தகவல் - தீபன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri