கிழக்கு ஆசிரியர் இடமாற்ற விடயத்தில் ஆளுநர் தலையிட வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஆசிரியர் தொழிற் சங்கங்களின் எழுத்து மூலமான இணக்கப்பாடின்றி கிழக்கு மாகாணத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களை இடைநிறுத்தியிருப்பதானது ஆசிரியர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் என சுட்டிக்காட்டியுள்ள கிழக்கிலங்கை கல்வி, சமூக அபிவிருத்தி மன்றம், இவ்விடயத்தில் மாகாண ஆளுநர் தலையிட வேண்டுமெனவும் வலியுறுத்தயுள்ளது.
இது தொடர்பாக மாகாண ஆளுநருக்கு இம்மன்றத்தின் தவிசாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார்(A.L. Mohammad Mukhtar) இன்று (12) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கிழக்கு மாகாண பாடசாலைகளில் தமது சொந்த வதிவிடங்களை விட்டு மிக நீண்ட காலமாக கடமையாற்றும் ஆசிரியர்களை 2020 ஆம் ஆண்டு முதல் இடமாற்றம் செய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் கோவிட்-19 அசாதாரண சூழ்நிலை காரணமாக அது நடைமுறைப்படுத்தப்பட வில்லை.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிலாவது இவ்விடமாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிரியர் சங்கங்கள் அங்கத்துவம் வகிக்கும் ஆசிரியர் இடமாற்ற சபையின் அங்கீகாரத்துடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான கடிதங்கள் தயாரிக்கப்பட்டு, தபாலிடுவதற்கு ஆயத்தமான நிலையில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரது தலையீட்டினால் குறித்த இடமாற்றம் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக இருந்து அண்மையில் ஓய்வு பெற்றுச்சென்ற அதிகாரி, தான் ஓய்வு பெற்றுச்செல்ல முன்னர் எப்படியாவது வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கோவிட்-19 ஆபத்தையும் கவனத்தில் கொள்ளாமல், இரவு பகலாக உத்தியோகத்தர்களைக் கொண்டு இடமாற்றக் கடிதங்களை அனுப்பி வைக்க தயாரான நிலையில், இடைநிறுத்தப்பட்டமை கவலை தரும் விடயமாகும்.
கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் இவ்வாறு நடந்து கொண்டமையானது ஓய்வுபெற்றுச் சென்ற கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இவ்வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தை இடை நிறுத்தினாரா என சந்தேகிக்க வேண்டியுள்ளதுடன் ஒரு மாகாணக் கல்வி பணிப்பாளருக்குரிய ஆசிரியர் இடமாற்றக் கடமையில் கல்விச் செயலாளர் அத்துமீறி செயற்பட்டாரா எனவும் எண்ணத் தோன்றுகிறது.
எவ்வாறாயினும் குறித்த ஆசிரியர் இடமாற்றத்தை ஆளுநர் தலையிட்டு, உடனடியாக அமுல்நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தபட்டிருக்கிறது.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri