வட மாகாண ஆசிரியர்களுக்கு மாவட்ட ரீதியிலான நியமனங்கள் வழங்கப்படும்: ஆளுநர் நா.வேதநாயகன் உறுதி
இந்தமுறை மத்திய அரசாங்கத்தின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டாலும், எதிர்காலத்தில் மாகாண சபையின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் போது, மாவட்ட ரீதியிலான நியமனங்களை வழங்குவதற்கே எதிர்பார்ப்பதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நேற்று(18.07.2026) யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்ற சர்வதேச கல்வி மாநாடு ஒன்றில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சமூக மேம்பாட்டுக்கான செயற்றிட்டம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட கல்வித் துறை மற்றும் பட்டதாரிப் படிப்புகள் பீடம் ஆகியவை இணைந்து நடத்தும் மூன்றாவது சர்வதேச கல்வி மாநாட்டின் ஓர் முக்கிய அங்கமாக, 'வட மாகாணத்தில் க.பொ.த. சாதாரண தர அடைவு மட்டங்களை மேம்படுத்துவது தொடர்பான பல்துறைசார் ஈடுபாட்டாளர்களின் உரையாடல்' எனும் தொனிப்பொருளிலான மாநாடு நேற்று(18) சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள கம்சியா மஹாலில் நடைபெற்றது.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படும் செயற்றிட்டங்களை வட மாகாணசபை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் பீடங்களுடனும் கலைபீடத்துடனும் சந்திப்புகளை நடத்தி, அவர்கள் ஊடாக எமது சமூக மேம்பாட்டுக்கான செயற்றிட்டங்களை எவ்வாறு முன்னெடுக்கலாம் என ஆராய்ந்துள்ளோம்.
ஆசிரியர் வளப்பங்கீடு
எமது கல்விப் புலத்துக்கு உதவும் வகையில் விஞ்ஞான பீடத்தினரும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்கள். இதேபோன்று வவுனியா பல்கலைக்கழகத்துடனும் நாம் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.
இந்தக் கலந்துரையாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டதைப் போன்று, எமது மாகாணத்தின் கல்வி மேம்பாட்டுக்காகப் பல விடயங்கள் செய்யப்பட வேண்டியுள்ளன.

குறிப்பாக, ஆசிரியர்கள் தொடர்பில் பல சவால்கள் காணப்படுகின்றன. மாகாணத்தினுள் ஆசிரியர் வளப்பங்கீடு சீராக அமையவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அதனைச் சீர்செய்ய மிகவும் அழுத்தமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அதன் வெளிப்பாடு மிகவும் மந்தமாகவே காணப்படுகின்றது.
தலைமைத்துவத்தின் தேவைப்பாடு குறித்து இங்கு பலராலும் வலியுறுத்தப்பட்டது. அதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
பிலியந்தல துப்பாக்கிச்சூடு! பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் - விசாரணையில் வெளியான தகவல்


ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan