புதிய அரசின் திட்டத்தினால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் - முன்னாள் பிரதம நீதியரசர்
அரசால் முன்மொழியப்பட்டுள்ள புதிய குற்றவியல் வழக்குத் துறை இயக்குநர் பதவி (அரசின் குற்றவியல் வழக்குத் துறையாளர்) சட்டத்திற்கும், நீதித் துறைக்கும் அச்சுறுத்தலாக அமையும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
1970 – 1977 காலகட்டத்தில் இதுபோன்ற ஒரு பதவி காணப்பட்டதாகவும், அந்த நேரத்தில் துணை குற்றவியல் வழக்குத் துறை இயக்குநராக பணியாற்றியவர் தான் என்பதால், அதன் விளைவுகளை நன்றாக அறிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா? அரசியலா? எனக் கேட்கும் நிலை உருவாகலாம் எனவும் சட்டத்துறை அதிகாரம் அரசியல்வாதிகளின் கீழ் ஒப்படைக்கப்படுவது மிகப்பெரிய தவறாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அரசியல் குழப்பம்
இந்த பதவியை அமைச்சரின் பரிந்துரையின்படி ஒரு தனியார் சட்டத்தரணிக்கு வழங்குவது மிகப்பெரிய அரசியல் செல்வாக்கு ஏற்படுத்தும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.
1970-77 காலகட்டத்தில் பண்டாரநாயக்க அரசாங்கம் இதைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை கைது செய்ய உத்தரவிட்டதாகவும், லலித் அத்துலமுதலி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அந்த சூழலில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது நீதித்துறை அதற்கு எதிராக சென்று, அரசின் தீர்மானங்களை நிராகரிக்க நேர்ந்ததால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே தவறை இன்றைய அரசு செய்தால், அது கொடூரமான முடிவுகளுக்கே வழிவகுக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மறுபரிசீலனை
நீதியமைச்சரின் கீழ் இந்த அதிகாரம் வருவது நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கு பெரிய சவாலாகும் என தெரிவித்துள்ளார்.
இதனால் நீதித்துறையின் அதிகாரம் அரசியலால் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் மிகுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரலாற்று பாடங்களை கருத்தில் கொண்டு, அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீதியமைச்சரின் கீழ் குற்றவியல் வழக்குத் துறையாளர் பணியமர்த்தப்படுவதை உடனடியாக திருத்த வேண்டும் சரத் என் சில்வா கோரீயுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
