பெண்ணை அவமானப்படுத்திய அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ள அரசு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மனித உரிமைகள் வழக்கறிஞர் ஸ்வஸ்திகா அருள்லிங்கத்திற்கு எதிராக பாலியல் ரீதியான இழிவான கருத்தை வெளியிட்டதற்காக, நடவடிக்கை எடுக்குமாறு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நிலையியற் கட்டளை 91(g)யை மேற்கோள் காட்டி, சபாநாயகரின் விருப்பத்திற்கமைய, அவமானகரமான வார்த்தைகள் மற்றும் அவமதிப்புகளை ஹன்சாட்டில் இருந்து நீக்க முடியும் என பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நடவடிக்கை
“சுவஸ்திகா அருள்லிங்கத்திற்கு எதிரான கருத்து மிகவும் வன்முறையான பாலியல் ரீதியானது. என்னால் அதனை இங்கு முழுமையாக படிக்க முடியாது. ஆனால் இது நிலையியற் கட்டளைகளை மீறியுள்ளதாக தெளிவாக உள்ளது.
இதுவொரு ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். அதற்கான நிலையியற் கட்டளையை நடைமுறைப்படுத்த அல்லது இந்த நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தைக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க சபாநாயகரை நான் வலியுறுத்துகிறேன்,” என பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
