அரசின் ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு எனது ஆட்சியில் தண்டனை:சஜித்
அரசின் ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு எனது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டார்.
மக்களுக்கான சேவைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,“நாட்டில் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். வீடு, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை பெற்றுக்கொடுக்கும் பணியை நாங்கள் முன்னெடுப்போம்.
ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கம் பெற்று மூன்று ஆண்டுகள். இந்த கட்சிக்கு 3 வயது. ஆனாலும், நாங்கள் பல்வேறு திட்டங்களை மக்களிற்கு பெற்று கொடுத்துள்ளோம்.
மாணவர்களின் நலன் கருதி 70 பாடசாலைகளுக்கு பேருந்துகளை வழங்கியுள்ளோம். வைத்தியசாலைகளிற்கு வைத்திய உபகரணங்களையும், சுமாட் வகுப்பறைகளையும் மாணவர்களிற்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் 30 வருட யுத்தத்தினால் பல்வேறு இழப்புக்களை சந்தித்துள்ளனர். இனப்பிரச்சினையாலும், மத பிரச்சினையாலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.
இதற்கு மேல் நாட்டை கொள்ளையடித்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கும் மக்கள் முகம் கொடுக்கின்றனர்.
வீட்டுத்திட்ட பணிகள்
இன்றைய அரசு மக்களின் மனதை அறிந்து செயற்படாத அரசாக உள்ளது. இது மக்களிற்கான அரசு அல்ல. அதனால்தான் பொருட்களின் விலையை அதிகரித்தும், எரிவாயு விலையையும் அதிகரித்துள்ளது. மேலாக வரியையும் அதிகரித்துள்ளது.
இந்த ஆட்சியானது மக்களை துன்பத்துக்குள்ளாக்கிய ஆட்சி. அரசின் ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு எனது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.
இவ்வாறான நிலையில் கரைச்சி, பச்சிலைப் பள்ளி பிரதேச சபைகளின் வெற்றிக்காக நாங்கள் கூடியுள்ளோம்.
என்னால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்ட பணிகள் கடந்த ஆட்சியாளர்களால் தடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சியமைத்த பின்னர் அதனை நான் தொடருவேன். அதற்காக எமக்கு ஆதரவினை தாருங்கள்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.