அரசியல் முடிச்சுகளை அறுப்பதற்கான கருவிகளாக தமிழ் அரசியல் கைதிகளை அரசு பயன்படுத்தப் போகிறதா?
தற்போதைய பொதுஜனப்பெரமுன அரசாங்கம் காலத்தின் கட்டாயத்தினால், தாம் விரும்பாத யதார்த்தங்களையும் பற்றிச் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் எழுதியுள்ள கட்டுரையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
அண்மையில் ஜனாதிபதி அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நாயகம் அன்டனியோ குட்றஸ் அவர்களைச் சந்தித்த போது வெளியிட்ட இரு கருத்துகள் ஏற்கனவே இந்த அரசாங்கத்தினால் விரும்பப்படாத கருத்துக்களாக இருந்தன.
அதாவது தமிழ் டயஸ்போராக்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். மேலும் சிறையிலுள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கவும் தயார் என்று கூறியுள்ளார்.
இந்த இரண்டு கருத்துகளும் காலத்தின் கட்டாயத்தால் ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயங்களாக அமைந்துள்ளன.
டயஸ்போராக்கள் என்பவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள், முன்னாள் விடுதலைப் புலிகள் என்று கூறி வந்த பொதுஜனப் பெரமுன அரசாங்கம் அவர்களோடு பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
டயஸ்போராக்களுடன் இலங்கையிலுள்ள தமிழ் உறவுகள் தொடர்பு கொண்டால் அல்லது அல்லது நிதிகளைப் பெற்று சமூக சேவைகள் செய்தால் அதனைப் புலிச்சாயம் பூசி புலனாய்வாளர்களால் விசாரிக்கும் நிலைமை காணப்பட்டது.
இன்று இந்த அரசாங்கம் தானாக விரும்பி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினை அனுசரித்துச் சென்றால்தான் ஜி.எஸ்.பி வரிச்சலுகையினைத் தொடர்ந்தும் தக்கவைக்கலாம் என்கின்ற உண்மை அரசாங்கத்திற்கு உணர்த்தப்பட்டுள்ளது.
அந்நியச்செலாவணி கையிருப்பில் இல்லாத நிலையில் திண்டாடும் இலங்கை அரசுக்கு ஜி.எஸ்.பி வரிச் சலுகையும் மேற்குலக நாடுகளால் நிறுத்தப்பட்டால் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக மாறிவிடும்.
அதேவேளை தற்போதைய நிலையில் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளான புலிச் சந்ததேகர்களை, ஆதரவாளர்களை அரசியல் பேரம் பேசலுக்கான பணயக்கைதிகள் போலவும் இந்த அரசு பயன்படுத்த நினைக்கிறது.
அதாவது புலிகளும் மனிதவுரிமைகளை மீறினார்கள் என்ற கருத்தினைப் பலமாக முன்வைத்து விட்டு அவர்களைப் பொதுமன்னிப் பின் கீழ் விடுதலை செய்வதாயின் தமிழர்களைக் கடத்தியவர்கள், காணாமல் ஆக்கியவர்கள் என்று தமிழ் உறவினர்களால் கூறப்படுகின்ற படையினர், புலனாய்வாளர்கள், ஒட்டுக் குழக்கள் பற்றியும் பேசக்கூடாது, அவர்களும் யாவர் என்று விசாரிக்கப்படாமலேயே மன்னிக்கப்பட வேண்டும் என்கின்ற மறைமுகமான செய்தியொன்று கூறப்படுகின்றது.
மேலும், சிறையிலுள்ள தமிழ்க்கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்களையும் சிறு அளவான இழப்பீடுகளையும் வழங்கி அந்தப் பிரச்சினையையும் முடித்து விடலாம் என்று அரசு நினைக்கிறது.
இந்த விடயத்தில் புலம் பெயர்த்துள்ள தமிழர்கள் அல்லது தமிழ் டயஸ்போராக்களையும் அழைத்துப்பேசிச் சமாளித்து விட்டால் அவர்கள் புலம் பெயர் தேசங்களில் இலங்கையரசுக்கு எதிராக மேற்கொள்ளுகின்ற எதிர்ப்புகள் அழுத்தங்களையும் இல்லாமல் செய்து விடலாம் என்று அரசு நினைக்கிறது.
அதாவது தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பில் விடுவித்தல், டயஸ்போராக்களுடன் பேசுதல் என்கின்ற தமிழர் தரப்பு விடயங்களைக் கையாள்வதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினைகளையும் அரசு முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் என்றுதான் பொதுஜனப்பெரமுன அரசாங்கம் நினைக்கிறது.
இந்த இடத்தில் சிறைகளில் இருக்கின்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மறைந்தவர்கள் கொல்லப்பட்டவர்களின் நினைவுகளை அனுட்டித்தவர்கள் என்கின்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லோரையும் கூட்டி அரசு பெரும் எண்ணிக்கையானவர்களை அரசு பொதுமன்னிப்பில் விடுவிப்பது போன்று காட்டிக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை முடித்துவைப்பதுடன் கடத்தியவர்கள், காணாமல் ஆக்கியவர்களுற்கு எதிரான குற்றங்களையும் விசாரிக்காமலேயே முடிவுக்குக் கொண்டுவர இலங்கை அரசு நினைக்கிறது.
ஆயின் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் என்பவர்கள், அரசின் இறுகிப்போயுள்ள உள்ளக சர்வதேச முடிச்சுகளை அறுப்பதற்கான கருவிகளாகப் பயன்படுத்துவதற்குப் பொதுஜனப்பெரமுன அரசு நினைக்கிறது.
இதற்குத் திரை மறைவில் தமிழ் மூளைகளும் செயற்படுகின்றனவா? என்ற நியாயமான கேள்வி தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. படையினர் மட்டுமல்ல புலிகளும் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற கருத்தினைத் தமிழர்கள் மூலமாக அரசு கூறவைக்க விரும்புகின்றது.
இதன் மூலமாக ஒன்றில் இருசாராரும் விசாரிக்கப்பட வேண்டும் அல்லது இருசாராரும் குற்றங்களில் இருந்து பொதுமன்னிப்பின் மூலம் விடுவிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் சூத்திரம், அரசியல் சமன்பாட்டினை பொதுஜனப்பெரமுன அரசு பின்பற்றப்போகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்காக சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள், அவர்களது குடும்ப உறவினர்கள் ஆகியோரை அழுத்துனர்களாக அரசு கையாளவும் முனையலாம். அரசியல் கைதிகளின் விடுவிப்பு என்ற சமன்பாட்டினையும்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை என்ற சமன்பாட்டினையும் அரசு ஏக காலத்தில் தீர்த்து விடலாம் என்று கங்கணம் கட்டுகிறது.
அதாவது சர்வதேச விசாரணை, சர்வதேசப் பொறிமுறை என்பதில் இருந்து அரசு தப்புவதற்கான தந்திரோபாயமாக இந்த உயாயத்தினைப் பின்பற்ற முனைய வாய்ப்புள்ளது. இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக்கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒற்றுமையாகச் செயற்படுவதன் மூலமாகவே தமிழர்களுக்கான நியாயத்தினை அடைய முடியும்.
சிலரது எழுந்தமானமான போக்குகள், தன்முனைப்பான சிந்தனைகள் தமிழர்களுக்கு நியாயத்தினைப் பெற்றுத் தராதென்ற உண்மையினை தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ்ப் புத்திஜீவிகள் உணர வேண்டும்.
நியாயமான நடுநிலையான தமிழ்ப்புத்திஜீவிகள் அமைப்பு மூலமாகத் தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் சிவிலமைப்புகள் ஒற்றுமையாக்கப்பட்டு நியாயமான பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாய தேவையாகும்.