படையினரை முன்னிலைப்படுத்தி தப்பிக்க முயற்சிக்கும் அரசாங்கம்
ஏமாற்றியது போதும் எனவும் இது இசை நாற்காலி போட்டியல்ல எனவும் ஜனநாயகத்திற்காக நம்பிக்கையில்லா தீர்மானமும் அரசியல் குற்றப் பிரேரணையும் கொண்டு வரப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் தனது அலுவலகத்தில் இன்று இதனை கூறியுள்ளார்.
இளம் தலைமுறையினர் ஜனநாயகத்திற்காக வீதியில் இறங்கியுள்ளனர். அவர்களின் போராட்டத்தை சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும். படையினரை முன்னிலைப்படுத்தி தப்பிக்க அரசாங்கம் முயற்சித்தாலும் போரை வென்ற சரத் பொன்சேகா உட்பட படையினரை பழிவாங்கியது யார் என்பது முழு உலகமும் அறியும்.
படையினரின் கௌரவத்தை காட்டிக்கொடுத்தது யார் என்பதும் அனைவருக்கு தெரியும்.தற்போதைய சந்தர்ப்பத்தில் அமைச்சு பதவிகளுக்காக மனித தலை மாற்றங்கள் நடக்கின்றன.இதனை நாட்டு மக்கள் கோரவில்லை.
தற்போது இருப்பது திரிபுப்பட்ட பொருளாதார கொள்கை. சர்வதேச உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் அந்நிய செலாவணியை வலுப்படுத்த புதிய நோக்கில் சர்வதேசத்தை வெற்றி கொள்ள வேண்டும்.
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அறிவியல் ரீதியாக தீர்வுகாண வேண்டும். ஆயுதங்கள் மூலம் பொருளாதார போரில் வெற்றி பெற முடியாது. நாட்டின் ஜனநாயகம், பொருளாதாரம், அரசியல் என்பவற்றுக்கு புதிய வேலைத்திட்டம் அவசியம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.