சிவில் சமூக செயற்பாட்டாளர்களை குறிவைத்துள்ள அரசு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத்தலைவர் சிவயோகநாதனிடம் (சீலன்) பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று 3 மணி நேர தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவில் சமூக செயற்பாட்டாளரான இவரிடம் புலிகள் மீளுருவாக்கம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்மை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் என அடையாளப்படுத்திய சிலர் இன்று காலை 11 மணியளவில் அவரது வீட்டுக்கு, சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அவர் தொடர்பிலான விபரங்களை சேகரித்தவர்கள் புலிகள் மீளுருவாக்கம் தொடர்பாக கூட்டங்களை நடத்தினீர்களா? , தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்பில் இருக்கிறீர்களா? வடக்கில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் ஏன் பங்குபற்றினீர்கள்? உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டீர்களா? எந்தெந்த ஊடகவியலாளர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்கள்? என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் மூன்று மணிநேர விசாரணையின் பின்னர் மேலதிக விசாரணைக்காக கொழும்பு தலைமை காரியாலயத்துக்கு அழைக்கும் போது வருகை தருமாறும் தெரிவித்துள்ளனர்.
இது எம்மை அச்சுறுத்தும் செயற்பாடு.இதுவரை இலங்கை அரசுக்கு எதிரான செயற்பாடுகளையோ, பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளையோ நான் மேற்கொண்டதில்லை. பல காலமாக சிவில் சமூக செயற்பாட்டில் நான் ஈடுபட்டு வருகின்றேன்.
தென்னிலங்கையில் உள்ள பல சமூக அமைப்புக்களில் அங்கம் வகித்தும் வருகின்றேன், சமீப காலமாக தான் இவ்வாறான விசாரணைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றேன்.
அரசு புதிதாக எம்மைப்போன்ற சமூக செயற்பாட்டாளரகளை குறிவைத்துள்ளது, எம்மை சுதந்திரமாக செயற்படவிடாமல் அச்ச நிலைக்குள் தள்ளும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது எனவும் சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.