சைபர் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள்! பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் விசேட கவனம்
பொதுப் பாதுகாப்பை உறுதி செய்தல், சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொலிஸ் சேவையின் திறனை அதிகரிப்பது தொடர்பில் பல விடயங்கள் குறித்து பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய அமைச்சரவை ஆலோசனைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய அமைச்சரவை ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
விசேட கவனம்
சைபர் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள் மற்றும் மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இக்குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், சட்டவிரோத சூதாட்டம் மற்றும் இதர சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இணையதளங்களை முடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சைபர் குற்றங்கள் தொடர்பில் நாட்டில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வெளிநாட்டினருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது வெளிப்படுத்தப்பட்டது.
குறித்த நாடுகளின் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து அந்த வெளிநாட்டினரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை
சைபர் குற்றப் புலனாய்வுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சட்ட அறிவைக் கொண்ட மனித வளத்தைப் பலப்படுத்துவதற்காக மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
மேலும், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு களப் பயிற்சி மற்றும் தேவையான வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை மேலும் திறம்பட செய்வதற்கு புதிய தொழில்நுட்ப அமைப்புகளை அறிமுகப்படுத்துவது மற்றும் காலத்திற்கு ஏற்ற வகையில் செயல்படக்கூடிய மத்திய அமைப்பு ஒன்றை நிறுவுவதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening