சட்டமூலங்களை ஆராயாமலே நாடாளுமன்றில் அரசாங்கம் சமர்ப்பிப்பு: சஜித் அணி சுட்டிக்காட்டு
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகிய இரண்டையும் மக்களின் இணக்கப்பாடன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவர், இவ்வாறு தெரிவித்தன் மூலம், ,அரசு இந்த இரு சட்டமூலங்களையும் முறையான ஆய்வுகளின்றி அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என்பது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் அமைந்துள்ள தனது அரசியல் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அஜித் பி. பெரேரா இவ்வாறு குறிப்பிட்டார்.
மனுக்கள் தாக்கல்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், குறித்த இரண்டு சட்டமூலங்களையும் மக்களின் இணக்கப்பாடன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்போவதில்லை என ஜனாதிபதி தற்போது கூறுகின்றார்.
ஆனால், இந்த இரு சட்டமூலங்களும் ஏற்கனவே நாடாளுமன்றத்தின் முதலாம் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு, வர்த்தமானியிலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், உயர்நீதிமன்றத்திலும் இந்தச் சட்டமூலங்களுக்கு எதிராகப் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சட்டமூலங்கள்
இந்நிலையில்தான், இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் மக்களுடன் மீண்டும் கலந்தாலோசிக்கவுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார்.

அவ்வாறாயின், மக்களின் அடிப்படை உரிமைகளுடன் கடுமையாக முரண்படுகின்ற பாரிய இரு சட்டமூலங்களை, அரசு அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது எந்தவொரு ஆய்வும் செய்யாமலா என்ற கேள்வி எழுகின்றது எனக் குறிப்பிட்டார்.