இலங்கை அரச அதிகாரிகள் மீது பாரிய குற்றச்சாட்டு!
இந்நாட்டில் இன்றைய அழிவுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய பல தரப்பினர் உள்ளனர். எல். ரீ.ரீ. ஈ, தமிழ் டயஸ்போரா, ஜே.வி.பி, தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் மற்றும் 75 வருடங்களாக இந்நாட்டை ஆட்சி செய்த கட்சிகளின் அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் மக்கள் விடுதலை முன்னணயின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் ஓரளவுக்கு அதிகப்படியான வாக்குகளைப் பெறுவார்கள் என நான் நினைக்கிறேன். எனினும் மக்களின் பக்கத்தில் இருந்து யோசித்தால் அது நல்ல ஒரு விடயமல்ல.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பாடம் புகட்டுவதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வாக்களிக்காமல் இருந்தால் நல்லது என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.
நாட்டின் அழிவுக்கு காரணமானவர்கள்
1988 /-1989 காலப்பகுதியில் தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜே.ஆர். ஜயவர்தன இந்து லங்கா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினார்.
இதனைக் கருத்தில் கொண்டுதான் தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் செயற்பட்டது. அதன் ஊடாகச் செயற்பட்டு, பிறகு அது சரியான திசையில் பயணிக்கவில்லை. அது தவறான பாதையிலேயே பயணித்தது. அதில் இணைந்து கொண்டு கூடாதவர்கள் அதனை அழித்தார்கள். பெரும் அழிவு ஏற்படுத்தப்பட்டது.
இன்று தேசிய மக்கள் சக்தியின் ஊடாக இணைந்திருப்பது அவ்வாறானவர்களே. மாற்றுவழியாகத் தெரிவு செய்வதற்கு முயற்சிப்பவர்கள் தொடர்பில் மக்கள் பின்னர் அறிந்து கொள்வார்கள்.
தேசிய மக்கள் சக்தியாக புத்திஜீவிகள் இணைந்திருக்கின்றார்கள் என அவர்கள் எமக்குக் காட்டுகின்றார்கள்.
இந்நாட்டில் இன்றைய அழிவுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய பல தரப்பினர் உள்ளனர். எல். ரீ.ரீ. ஈ, தமிழ் டயஸ்போரா, ஜே.வி.பி, தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் மற்றும் 75 வருடங்களாக இந்நாட்டை ஆட்சி செய்த கட்சிகளின் அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
இதன் காரணமாகவே நாடு இன்று இந்நிலைக்கு உள்ளாகியிருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் நாடு இந்நிலையிலிருந்து முன்னோக்கிச் செல்லும் என நான் நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.