அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்
இலங்கையில் இந்த வருட இறுதிக்குள் நிலைமை சீராக இருந்தால் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நம்பிக்கையுடன் கூற முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெலியஅத்த, சிட்டினமாலுவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வருட இறுதிக்கு முன்னர், இன்னும் ஓரிரு சந்தர்ப்பங்களில் எரிபொருளின் விலையும் குறையலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களின் விலை குறைவதையே எதிர்பார்க்கின்றனர் மாறாக அதிகரிப்பை எதிர்பார்க்கவில்லை எனவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊழலுக்கு எதிரான சட்டமூலம் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.