நிரந்தர தீர்வினை பெற்றுத்தருமாறு அரச உத்தியோகத்தர்கள் கோரிக்கை! (Photos)
திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண அமைச்சு மற்றும் பல்வேறு திணைக்களங்களில் கடமையாற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச உத்தியோகத்தர்கள் தங்களது போக்குவரத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பில் அரச உத்தியோகத்தர்கள் தெரிவிப்பதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களை உரிய நேரத்துக்கு திருகோணமலைக்கு ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான மட்டக்களப்பு - திருகோணமலை பஸ் சேவை தினமும் அதிகாலை 5.45 மணிக்கு மட்டக்களப்பிலிருந்தும், மாலை 4.30 மணிக்கு திருகோணமலையிலிருந்தும் இச்சேவை இடம்பெறுகின்றன.
ஆனால் இந்த பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து, மாதத்தில் மூன்று நாட்கள் இடைநடுவில் பழுதடைந்தும், டயர் காற்றுப்போகும் நிலைமையே காணப்படுவதாகவும், இதனால் உரிய நேரத்துக்கு தங்களின் அலுவலக கடமைக்கு செல்ல முடியாதுள்ளதாகவும், அன்றைய தினம் அரைநாள் விடுமுறையாகவும் செல்கின்றது என அதில் பயணிக்கும் அரச உத்தியோகத்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்கவில்லை என்றும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதில் பயணிக்கும் அனைத்து உத்தியோகத்தர்களும் திருகோணமலையில் உள்ள கல்வியமைச்சு, சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு, பிரதிப் பிரதம செயலாளர் செயலகம், சுகாதாரத் திணைக்களம், கட்டடங்கள் திணைக்களம், பொதுச் சுகாதார சேவைகள் அலுவலகம், உள்ளூராட்சி திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி சபைகள், கூட்டுறவு திணைக்களம், தபால் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உள்ளிட்ட பல்வேறு அரச நிருவனங்களில் கடமையாற்றுகின்றவர்களாவர்.
இந்தப் பிரச்சினை அடிக்கடி இடம்பெறுகின்றமையினால் இடைநடுவில் வேறு பஸ்ஸில் பயணிக்கவேண்டிய ஒரு சங்கடமான சூழ்நிலைமைக்கு ஆளாக வேண்டியுள்ளதுடன் தேவையற்ற செலவீனங்களும் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கையினை உரிய அதிகாரிகள் உடனடியாக பிரச்சினையை தீர்த்து வைக்க முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
