மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருவிழா! ஐந்து உலக நாட்டு தமிழ் அறிஞர்களுக்கு தமிழக அரசால் அழைப்பு (Photos)
“மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருவிழா” எனும் நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுவதற்காக ஐந்து உலக நாட்டு தமிழ் அறிஞர்களுக்கு தமிழக அரசால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிலிருந்து மலேசிய இந்தியக் காங்கிரஸ் துணைத் தலைவரும், மேனாள் மனித வளத்துறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும், இலக்கியப் பேச்சாளருமான டத்தோ ஶ்ரீ.எம்.சரவணன்.
சிங்கப்பூரிலிருந்து தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன்,
இலங்கையிலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், உட்பட புலம்பெயர் தமிழர்களிலிருந்து சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவரும், எழுத்தாளருமான முனைவர் நாகேஸ்வரன் அருள்ராசா (கலாநிதி கல்லாறு சதீஷ்) ஆகியோர் தமிழக அரச விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திட்டமிடலில் நடைபெற்ற விழாவில் தமிழ் நாட்டின் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிநாட்டு அறிஞர்களை வரவேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து முறையே சிங்கப்பூர், இலங்கை, மொறிஸியஸ் அறிஞர்கள் உரையாற்றினர்.
நான்காவதாக கலாநிதி கல்லாறு சதீஷ் உரையாற்றினார். அவர்தம் உரையில்”இலங்கைத் தமிழர் புனர்வாழ்வு முகாம் என்றிருந்த பெயரை இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம் என்று மாற்றிய தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கைத் தமிழர்களை “அவர்கள் அநாதைகள் அல்ல, அவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம்”என்று ஒரு குறளைப்போல் உரைத்த வார்த்தைகளைக் கேட்ட உலகத் தமிழ்ச்சமூகம் புதிய விடியல் இனித் தமிழர்களுக்கு உருவாகியுள்ளது என்று மகிழ்ச்சியடைந்தார்கள் என்று உரைத்தார்.
இறுதியாக மலேசிய இந்தியக் காங்கிரஸ் துணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் முதல்வரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“நமது முதல்வர்“ எனும் புகைப்படக் கண்காட்சியை உலகத்தமிழ் அறிஞர்கள் இதன்போது பார்வையிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.