தொற்று நோயை கட்டுப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ள திட்டங்கள்
பொது சுகாதார அவசரநிலை ஏற்பட்டால் நோய் கட்டுப்பாடு தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் சுகாதார நிபுணர்களின் கருத்துக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு முன்னணி நிபுணர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கோவிட் தொற்றுநோய் மூன்றாவது அலையை முறையாக கட்டுப்படுத்தும் பொறுப்பில் இராணுவத் தளபதி முன்னிலை வகிக்கின்ற நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது குறித்த 10 விடயங்களை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்துள்ளது.
எனினும், இதில் இராணுவத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளதா என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.
வெளிநாட்டினரை தனிமைப்படுத்துவதற்கு நாட்டை பயன்படுத்துவதால் புதிய வைரஸ்கள் நாட்டிற்குள் நுழையும் அபாயம் காணப்படுவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏப்ரல் 29, வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடனான கலந்துரையாடலின் போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக சபை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் குறித்த விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளது.
கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்டு நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையை ஆராய்ந்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்க பங்களிப்பின் மூன்று முக்கிய கூறுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் பங்களிப்பு, சுகாதார சேவையின் செயல்திறன் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு ஆகிய மூன்று முக்கிய கூறுகள் சிறப்பாக செயற்படுவதன் முக்கியத்துவத்தை அந்த சங்கம் எடுத்துரைத்துள்ளது.
கோவிட் தொற்றுநோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பல்வேறு நாடுகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதோடு, தொற்றுநோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பல நாடுகள் பின்பற்றிய முறைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சுட்டிக்காட்டியதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
01. தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை கண்டிப்பாக அமுல்படுத்துவதன் மூலமும், இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் அபாயங்களை துல்லியமாக கண்டறிவதற்கும் பொது மக்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளல்.
02. சோதனை திறன் மற்றும் திடீர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அதனை வலுப்படுத்தல்
03. தேவைக்கேற்ப பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சுகாதார கட்டுப்பாடுகள் மீறப்படுவதை தடுத்தல்
04. தடுப்பூசி திட்டத்தை வலுப்படுத்துவதன் மூலம் கோவிட் பரவுவதை கட்டுப்படுத்த இஸ்ரேல் போன்ற சில நாடுகளால் முடிந்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பின்வரும் திட்டங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
- கோவிட் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் திடீர் சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளல் அதனை வலுப்படுத்துதல் மற்றும் கொத்தணி தொற்று மற்றும் தொற்றுகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதைப் பொறுத்து தாமதமின்றி பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல்.
- உள்ளூர் பயணங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதில் வைத்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கான சரியான பொறிமுறையை நிறுவுவதன் மூலம் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துதல்.
- தற்போதுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு சிகிச்சை மையங்களுக்கு நோயாளிகளின் வழிகாட்டுதலைப் புதுப்பித்தல். அறிகுறிகள் இல்லாத நோயாளிகள், பிற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் மற்றும் அறிகுறி நோயாளிகளின் குழுவை சிகிச்சை மையங்களுக்கு பரிந்துரைக்கும் கொள்கையை மதிப்பாய்வு செய்தல்.
- நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றுவதற்கான வழிகாட்டுதல்களைப் புதுப்பித்தல்.
- தீவிர சிகிச்சை பிரிவுகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் கட்டில்களின் அளவை அதிகரிக்க குறுகிய மற்றும் நீண்ட கால பொறிமுறையை கண்டறிதல்.
- தனிப்பட்ட சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்குத் தேவையான ஒட்சிசன் சேமிப்பை உறுதி செய்தல் மற்றும் திறமையான விநியோக முறையை உறுதி செய்தல்.
- தற்போது வைத்தியர் பற்றாக்குறை உள்ள வைத்தியசாலைகளுக்கு நியமனங்களை எதிர்பார்க்கும் வைத்தியர்களை நியமித்தல்.
- கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெறுவதில் ஏற்படும் அபாயங்களை பொதுமக்களுடன் சரியாக பகிர்ந்துகொள்ளல்.
- கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்த தேவையான பொது ஒழுக்கத்தை உறுதிப்படுத்துதல்.
- உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை இறக்குமதி
செய்வதற்கான செயல்முறையை பயனுள்ளதாக்குதல்.