மூடப்படும் நான்கு அரச நிறுவனங்கள்: அமைச்சர் வெளியிட்டுள்ள காரணம்
நிதி பற்றாக்குறை காரணமாக நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (03.05.2023) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, பராமரிப்பதற்கு நிதிப் பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக, மக நெகும மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதிப் பற்றாக்குறை
மக நெகும வீதி கட்டுமான உபகரண நிறுவனம், 2004ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது முன்னர் இருந்த வீதி கட்டுமான அபிவிருத்தி நிறுவனத்தின் (RCDC) மறு உருவாக்கமாகும்.
எவ்வாறாயினும், இந்த அரச நிறுவனமும் அதனுடன் இணைந்த நிறுவனங்களும் அவற்றைப் பராமரிப்பதற்கான நிதிப் பற்றாக்குறையால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
அரச நிறுவன மறுசீரமைப்பின் கீழ் இந்த நிறுவனங்கள் கலைக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.