இருள் சூழ்ந்த சிறைச்சாலைகளாக அரச அலுவலகங்கள்! இலங்கையில் நடைமுறைக்கு வரப்போகும் திட்டங்கள்
அரச அலுவலகங்கள் ஆடம்பரமான அமைப்புகளுக்குப் பதிலாக, மக்கள் வரிப்பணத்தில் உருவாகுகின்றவை என்பதை உணர்த்தும் வகையில் எளிமையாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றப்பட வேண்டுமென பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அரச நிறுவனங்களின் அமைப்பு
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பழைய சுவர்களால் சூழப்பட்ட, இருள் சூழ்ந்த சிறைச்சாலைகள் போன்ற அமைப்பிலிருந்து அரச அலுவலகங்கள் வெளியேற வேண்டும். எனினும் அலுவலகங்களின் அளவு என்பது அதிகாரிகளின் பதவியைக் காட்டுவதாக இருக்கக்கூடாது.
ஆடம்பரமான அமைப்புகளுக்குப் பதிலாக, மக்கள் வரிப்பணத்தில் உருவாகும் அரச நிறுவனங்கள் சாதாரண மக்களுக்கு சொந்தமானவை என்பதை உணர்த்தும் வகையில் எளிமையாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றப்பட வேண்டும்.

முழுமையாக நடைமுறைக்கு வரும் திட்டங்கள்
அத்துடன், பத்தரமுல்லை செத்சிர்றிபாய வளாகத்தின் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடையும் போது நாட்டில் டிஜிட்டல் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமத் திட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வந்துவிடும். இதனால், கோப்புகளை சேமித்து வைப்பதற்கான பெரிய அலமாரிகளுக்குப் பதிலாக இக்கட்டடம் ஒரு நவீன காகிதமற்ற மையமாக செயற்படும்.
வெவ்வேறு இடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களால் ஏற்படும் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே இடத்திற்குக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் தீர்மானம் என குறிப்பிட்டுள்ளார்.