அனைத்து அரச நிறுவனங்களிலும் நடைமுறைக்கு வரும் புதிய தடை - வெளியான சுற்றறிக்கை
எதிர்வரும் 31ஆம் திகதி முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒரு தடவை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும் அவற்றை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட சுற்றறிக்கை ஒன்றை கடந்த 15ஆம் திகதி அமைச்சகம் வெளியிட்டு, அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது.
முற்றிலுமாக தடை
அதன்படி, மே 31 ஆம் திகதிக்குப் பிறகு அனைத்து அரச நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை வாங்குவதும் பயன்படுத்துவதும் முற்றிலுமாகத் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை சீரமைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், 2023.07.19 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அரச நிறுவனங்களுக்குள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கை சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.
பாரதூரமான சுகாதார பாதிப்புகள்
2023 ஒக்டோபர் 01 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உணவுப் பொதிகள், தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், கத்திகள், பூமாலைகள் மற்றும் இடியாப்பத் தட்டுகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதோ அல்லது விற்பனை செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் எண் 2034/37-இன் படி, அரசியல், சமூக, மத மற்றும் கலாசார நிகழ்வுகளின் அலங்காரங்களுக்காக அனைத்து வகையான பொலித்தீன் மற்றும் பொலிப்ரோப்பிலீன் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களை முறையற்ற விதத்தில் அகற்றுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், விலங்குகள் அவற்றை உட்கொள்வதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், மைக்ரோ பிளாஸ்டிக் மனித உடலுக்குள் செல்வதால் பாரதூரமான சுகாதாரப் பாதிப்புகள் உருவாகுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, வரவிருக்கும் வெசாக் பண்டிகைக்கான அலங்காரங்கள் மற்றும் தன்சல்களின் போது பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு FBI புலனாய்வுக்குழு வந்துள்ளதாக வெளியான தகவல்! அமெரிக்கத்தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு