மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை - மரிக்கார்
மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு எதனையும் வழங்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், நாட்டு மக்கள் எதிர்நோக்கி வரும் எந்தவொரு பிரச்சினைக்கும் இந்த அரசாங்கம் தீர்வுத் திட்டங்களை வழங்கவில்லை.
எரிபொருள் விலையேற்றம், எரிவாயு விலை மாற்றம், வாழ்க்கைச் செலவு உயர்வு என மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச பொருட்களின் விலைகளைக் குறைப்பார் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த போதிலும் இதுவரையில் அது நடக்கவில்லை.
எரிபொருள் விலையேற்றம் குறித்த சர்ச்சையுடன் தொடர்புடைய அமைச்சர் உதய கம்மன்பிலவோ அது குறித்து விமர்சனம் செய்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமோ இதுவரையில் பதவி விலகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவர்களை தற்பொழுது தேடிக் கொள்ள முடியாதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.