நெருக்கடியை தீர்க்கும் சந்தர்ப்பத்தை அரசாங்கம் இழந்து விட்டது
எரிபொருள் நெருக்கடி ஊடாக ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக தற்போது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா (Dr.Harsha De Silva) தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமல்லாது எரிபொருள் நெருக்கடி காரணமாக நாட்டின் வங்கி கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் நாட்டின் வங்கி கட்டமைப்பும் நெருக்கடிக்கு உள்ளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். டொலர் நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வதேச நாணயத்திடம் செல்லுமாறு பல தரப்பு அரசா்ஙகத்திடம் கோரிக்கை விடுத்தது.
இதற்கு அரசாங்கம் செவிசாய்க்க தயாராக இருக்கவில்லை. இதற்கு பதிலாக பல்வேறு ஒட்டுப்போடும் தீர்வு யோசனைகளை அரசாங்கம் கையாண்டது. இவை தற்போது ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு காரணம்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளான சிறு தொகை வெளிநாட்டவர்களை காட்டியோ வேறு ஒட்டுப்போடும் தீர்வுகளை முன்வைத்தோ நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது. நெருக்கடியை சரியான அடையாளம் கண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது ஒரே ஒரு தீர்வாக இருந்தது.
அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக அந்த வாய்ப்பும் தற்போது இல்லாமல் போயுள்ளது எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் நிவாரணங்களை பெற்றுக்கொள்ளவிருந்த கால எல்லை தற்போது முடிந்து விட்டது.
இதனடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் கதவுகள் மூடப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியம், எந்த நாட்டின் மீதும் சட்டத்தை திணிக்காது, நிபந்தனைகளை விதிக்காது.
சர்வதேச நாணய நிதியத்தை பூச்சாண்டியாக காட்டி, நெருக்கடிக்கு தீர்வுகாண இருந்த சிறந்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் இழந்துள்ளது எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.