வடக்கில் கடலட்டை வளர்ப்பதற்கு சீன நிறுவனத்திற்கு நல்லாட்சி அரசே அனுமதி வழங்கியது - டக்ளஸ் தேவானந்தா
கடந்த நல்லாட்சி காலத்தில் அரியாலையில் சீன நிறுவனம் கடலட்டை வளர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் ஒரு பிரிவுதான் தற்போது கௌதாரி முனையில் இயங்கி வருகிறது.
அந்த பகுதி கடற்றொழிலாளர் சங்கத்துடன் கதைத்துச் செய்வதாகத்தான் ஒரு கதையுள்ளது. சீன நிறுவனத்துடனான உடன்படிக்கையில் கௌதாரிமுனை மீனவர்கள் கையொப்பமிட்டிருக்காவிட்டாலும், அவர்களிற்குச் சீன நிறுவனம் தனிப்பட்ட ரீதியில் ஏதும் வழங்கியதோ தெரியவில்லையென கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பூநகரி, கௌதாரிமுனையில் சீன நிறுவனமொன்று சட்டவிரோதமாகக் கடலட்டை வளர்ப்பதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அதில் ஒரு குழப்பம் ஒன்றுள்ளது. அந்த திணைக்களத்தின் அனுமதி எடுத்ததாக சொல்கிறார்கள். செய்தியில் சொன்னதுதான் எனக்கு தெரியும். நான் இந்த கிழமை அங்கு வருவேன். நேரில் வந்து பார்த்த பின்னரே என்னால் முடிவெடுக்க முடியும். கடற்றொழில் அமைச்சின் நட்டா நிறுவனத்தின் அனுமதி பெற்றே வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
யாழ்ப்பாணம் அரியாலையில் கடந்த ஆட்சியில் இந்த நிறுவனம் செயற்படத் தொடங்கியது. அதன் ஒரு பிரிவுதான்- கௌதாரி முனை கடற்றொழிலாளர் சங்கத்துடன் கதைத்துச் செய்வதாகத்தான் அந்த கதையுள்ளது. நான் அங்கு நேரில் வந்து பார்த்து விட்டுத்தான் என்ன செய்யலாமென்பதை யோசிக்கிறேன்.
கௌதாரிமுனை கடலட்டை பண்ணை ஒப்பந்தத்தில், கடற்றொழிலாளர் சங்கங்கள் இதுவரை ஒப்பமிடவில்லை, எனினும் பண்ணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது பற்றிக் கேள்வியெழுப்பப்பட்ட போது,
அந்த ஒப்பந்தத்தில் அவர்கள் ஒப்பமிடா விட்டாலும், சீன நிறுவனம் தனிப்பட்ட ரீதியில் எதுவும் வழங்கியதோ தெரியவில்லை. ஏனெனில் அவர்களின் ஒத்துழைப்பில்லாமல் அங்கு கடலட்டை பண்ணையை ஆரம்பித்திருக்க முடியாது.
பக்கத்துக் கிராம மக்களே, இந்த பகுதி மக்களின் அனுமதியில்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில், இந்த பண்ணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்றால், அந்த பகுதி கடற்றொழிலாளர் சங்கத்தினதோ அல்லது அதன் ஒரு பகுதியினதோ ஏதோ ஒரு விதமான அங்கீகாரம் இருந்திருக்க வேண்டும்.
நேரில் வந்து பார்த்து விட்டுத்தான் கதைப்பது நல்லதென நினைக்கிறேன்.
ஊடகங்கள் சுயலாப அடிப்படையில், உள்நோக்கத்தின் அடிப்படையில் இவ்வாறு பல
விடயங்களை வெளியிடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
