காலிமுகத்திடல் போராட்டம்- நீதிவான் திலின கமகே தொடர்பில் சட்டத்தரணிகள் கோரிக்கை
காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு நடவடிக்கையையும், கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேயின் முன்னிலையில் பட்டியலிடவேண்டாம் என்று சட்டத்தரணிகள் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சட்டத்தரணிகளிடமிருந்து 100 கையொப்பங்களை கொண்ட மனுவொன்று இன்று நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நீதிவான் திலின கமகேவின் நேர்மை மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை பொதுமக்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலிமுகத்திடல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக ஏதேனும் பாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், போராட்டக்காரர்களிடையே கடுமையான அமைதியின்மை மற்றும் குழப்பம் மற்றும் இரத்தக்களரி கூட ஏற்படும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் திலின கமகே, நீதிச் சேவை ஆணைக்குழுவினால் அண்மையில் மீளப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்த நீதவான் தற்போதைய ஆட்சியுடன் நெருங்கிய அரசியல் தொடர்பு கொண்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் நீதித்துறை அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்கும் முன்னர், அவரது சகோதரர் மேல் மாகாண சபை உறுப்பினராகவும், அவர் மக்கள் ஐக்கிய முன்னணியின் (MEP) முக்கிய பிரமுகராகவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நீதிவான் திலின கமகே தொடர்பில் இன்று நாடாளுமன்றத்திலும் மனுஷ நாணக்கார தமது அதிருப்தியை வெளியிட்டார்.



