அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறித்து நிதி இராஜாங்க அமைச்சரின் புதிய அறிவிப்பு
இந்த மாதத்தில் சமுர்த்தி கொடுப்பனவு, பாடசாலை அச்சுப்புத்தகம் அச்சிடுதல், நெல் கொள்வனவு, அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துதல் போன்ற விடயங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாவுக்கு மேல் செலவிட வேண்டி இருக்கிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடு பொருளாதார ரீதியில் சிக்கலான நிலைக்கு முகம்கொடுத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், நாட்டின் வருமானத்துக்கு அமைய செலவு ஒழுங்குவரிசை ஒன்றை அமைத்து அதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறான நிலையில் செலவு செய்யும் ஒழுங்குவரிசையை மாற்றவேண்டி ஏற்பட்டால் பொருளாதார முகாமைத்துவம் செய்வதில் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படுகிறது.
ஏற்படும் சிக்கல் நிலை
நாட்டில் இந்த வருடத்துக்கு செலவிட வேண்டிய அனுமதிக்கப்பட்ட பல விடயங்கள் பாரியளவில் புத்தகத்தில் இருக்கின்றன. என்றாலும் எமது மறை பொருளாதாரத்தில், செலவிடுவதில் ஒழுங்குவரிசை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு செலவழித்து வருவதாலே மக்கள் கடந்த காலங்களில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள இருந்துவந்த வரியை இல்லாமலாக்கி இருக்கிறோம்.
ஆனால் தற்போது நாங்கள் பின்பற்றிவரும் செலவிடும் இந்த ஒழுங்குவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டி ஏற்பட்டால். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்கு செலவிடுவதில் சிக்கல் ஏற்படும்.
அத்துடன் இந்த மாதத்தில் சமுர்த்தி கொடுப்பனவு, பாடசாலை அச்சுப்புத்தகம் அச்சிடுதல், நெல் கொள்வனவு, அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துதல் போன்ற விடயங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாவுக்கு மேல் செலவிட வேண்டி இருக்கிறது.
அதேபோல் உரம் கொள்வனவு செய்வதற்கு செலவிட வேண்டி இருக்கிறது. 50மில்லியனுக்கு அதிகம் செலவிட வேண்டிய பொருட்களுக்கு திறைசேரி பிணைமுறி மூலம் வழங்கி வருகிறோம்.
இவ்வாறே எமது செலவு நடவடிக்கைகளை தற்போது முகாமைத்துவம் செய்து வருகிறோம். இந்நிலையில் இந்த செலவு ஒழுங்குவரியில் மாற்றம் ஏற்பட்டால் பாரிய பிரச்சினைகளுக்கு எமக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என குறிப்பிட்டார்.