மட்டுப்படுத்தப்படும் அரச ஊழியர்களின் கொடுப்பனவு! ஜனாதிபதி ரணிலின் நடவடிக்கை
அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர மாற்றுத்திட்டங்கள் எதனையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
75 ஆவது சுதந்திர தினத்தை கௌரவமான முறையில் விமர்சையாக கொண்டாட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். நாட்டு மக்கள் இந்த சுதந்திரத்தை எவ்வாறு கொண்டாடுவார்கள் என்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தவில்லை.
தன்சானியாவின் ஜனாதிபதியை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்
இலங்கையை போன்று தன்சானியா நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது. தன்சானியா நாட்டின் பதில் ஜனாதிபதியாக சாமியா சுலுஹூ ஹசன் பதவி வகிக்கிறார். தன்சானியாவின் 61 ஆவது சுதந்திர தின செலவுகளுக்காக இலங்கையின் நாணய பெறுமதிக்கு அமைய 17 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுதந்திர தினத்திற்கு 17 கோடி ரூபா செலவு செய்வதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
சுதந்திர தினத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை விசேட தேவையுடைய மாணவர்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு தன்சானியா நாட்டின் பதில் ஜனாதிபதி அந்நாட்டு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளமை முழு உலகமும் உன்னிப்பாக அவதானித்துள்ளது.
அரச நிதி சேமிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்சானியா நாட்டு ஜனாதிபதியை சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.
அரச செலவுகளை மட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர மாற்றுத்திட்டம் எதனையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.