பெருமளவில் அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம்! பொய் கூறி அதிகாரத்திற்கு வரும் ஆட்சியாளர்கள்
அரச செலவுகளை எல்லையற்ற வகையில் அதிகரித்துக் கொண்டிருப்பது, பல்வேறு பொய்களைக் கூறி பல அரசாங்கங்கள் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டமையினாலேயே ஆகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொய்களைக் கூறிக் கூறி அரசியல்வாதிகள் வாக்குகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கையில் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் பெருமளவில் அதிகரித்தன.
தேர்தலில் வெற்றிப்பெற அதிகரிக்கப்பட்ட சம்பளம்
2000ஆம் ஆண்டில் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவு 152 பில்லியனாகும். 2005ஆம் ஆண்டில் 185 பில்லியன். 2021ஆம் ஆண்டில் 478 பில்லியன். 2015ஆம் ஆண்டில் செலவுகள் இரு மடங்காக அதாவது, 716 பில்லியனாக அதிகரித்தது.
2020ஆம் ஆண்டில் செலவுகள் 1051 பில்லியனாகும். 2021ஆம் ஆண்டில் செலவுகள் 1115 பில்லியன் ரூபாய்களாகும். அதாவது 633 வீதத்தில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அதிகரித்துள்ளது.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அரச சேவைக்காக அரசியல் காரணங்களினால் அதிகளவில் ஆட்சேர்த்தது மற்றும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பெருமளவில் சம்பளத்தை அதிகரித்தது.
இந்த பொருளாதார நிலைகளை அறிந்ததால் நான் ஒரு போதும் தேவையில்லாத வகையில் எனது நிறுவனங்களில் ஆட்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை.
லேக் ஹவுஸ், சுயாதீன தொலைக்காட்சி, ரூபவாஹினி, தபால் மற்றும் புகையிரத் திணைக்களங்களில் நான் எவரையும் உள்ளீர்க்கவில்லை.
எனினும் ஒரு அமைச்சர் எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு மாத்திரம் 6000 பேரை ஆட்சேர்ப்புச் செய்திருக்கின்றார். இதற்கு அரச அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள். எல்லோரும் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.