ஜனநாயகத்திற்காக போராடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் - சஜித்
ஜனநாயகத்திற்காகப் போராடுபவர்கள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இலவசக் கல்விக்காகப் போராடிய மாணவர் ஆர்வலர்களைக் கைது செய்வது அதன் ஒரு படியாகும் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து போராடும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், துயரம், கண்ணீர் மற்றும் வலியால் மேற்கொள்ளப்படும் மக்களின் போராட்டங்களை அரசங்கத்தினால் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரச்சனைகளைச் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்கு முன், அவற்றை உள்ளக ரீதியாகத் தீர்ப்பதே தனது கொள்கை என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் கோவிட் பேரழிவு ஆபத்து காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தியால் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்பவை மக்களின் நலன் கருதி தற்காலிகமாகச் சிறிது காலத்திற்கு நிறுத்தப்படுவதாகத் தெரிவித்த அவர், என்றாலும் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிரான செயற்பாடுகளைத் தாம் நிறுத்தப்போவதில்லை என்றும் கூறினார்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அமில சந்தீப உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலங்கம காவல் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த போதே சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஜோன் கொத்தலாவல தனியார் பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றம் அருகே நடத்திய போராட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் ஆர்வலர்களின் நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கேட்டறிந்துகொண்டார்.