தேர்தல்களை நடத்தாமல் ஆட்சியை நீடிக்க அரசாங்கம் சதி! சம்பிக்க குற்றச்சாட்டு
தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்கான சதித்திட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் செயற்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், "நாட்டின் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாமல், தங்களது ஆட்சிக் காலத்தை நீடித்துக்கொள்வதற்காகவே அரசு 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கையில் எடுத்துள்ளது.
சில அமைச்சர்கள் தேர்தல்கள் வராது எனப் பிரகடனம் செய்த போதிலும், ஜனாதிபதியோ அரசின் பேச்சாளரோ அதனை இதுவரை மறுக்கவில்லை.
பொருளாதாரப் பிரச்சினை
சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல்களின்படி, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2026இல் 8.6 பில்லியன் டொலர்களாகவும், 2027இல் 12 பில்லியன் டொலர்களாகவும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், எந்தவித உற்பத்தி வளர்ச்சியோ புதிய முதலீடுகளோ இல்லாமல் வெறும் சமூக வலைத் விளம்பரங்களைக் கொண்டு நாட்டை நடத்த முடியாது.

கடந்த 2022 மார்ச் 7 அன்று இலங்கை வங்குரோத்தாகும் நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் இரகசியக் கடிதம் மூலம் எச்சரித்திருந்தும், அதற்குக் காரணமான எவர் மீதும் தற்போதைய அரசு இதுவரை முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகளை மூடிமறைத்து மக்களின் கவனத்தை வேறு திசைக்குத் திருப்புவதற்காகவே அரசு இத்தகைய நாடகங்களை நடத்துகின்றது.
அரசின் இந்த ஏமாற்று வேலைகளுக்கு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. கூட்டு எதிர்க்கட்சியாக நாடு முழுவதும் சென்று மக்களை விழிப்புணர்வூட்டவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.