நிதி ஒதுக்கீட்டில் தமிழ் பிரதேசங்களுக்கு பாரபட்சம் காட்டும் அரசு - பிரதேச சபைத் தலைவர் குற்றச்சாட்டு
மத்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் சமத்துவம் பேணப்பட வேண்டும் என திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைத் தலைவர் வெள்ளைத்தம்பி சுரேஸ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலையில் இன்று(12.10.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு, கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெறும் 3 இலட்சம் செலவில் வீதி புனரமைப்பு
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளைப் புனரமைப்பதற்காக, பிரதேச செயலகத்தினால் முன் அனுமதி கோரி கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், புளியங்குளம் வட்டாரத்திற்கான வீதி புனரமைப்புப் பணிகளுக்கு வெறும் 3 இலட்சம் ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்காகப் பெருந்தொகையான நிதி பெரும்பான்மை இன மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஏனைய பிரதேசங்களிலும் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற வேண்டும் என்பதை நாம் ஒருபோதும் மறுக்கவில்லை. ஆனால், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேச சபை எல்லைக்குள், அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் ஏன் இவ்வாறான பாரபட்சம் காட்டப்படுகின்றது என்பதே எமது கேள்வி” என அவர் தெரிவித்தார்.
சமமற்ற நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி
இவ்வாறான சமமற்ற நிதி ஒதுக்கீட்டுக்கு பிரதேச சபை அனுமதி வழங்குவது, தம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் துரோகமாக அமையும் எனக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகவே குறித்த வீதி புனரமைப்புத் திட்டத்திற்கு சபையின் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

பிரதேச செயலகத்தினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பான 14 நாட்கள் நிறைவடைவதற்கு முன்னரே, புளியங்குளம் பகுதி மக்களிடம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபைத் தலைவர் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, புளியங்குளம் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட வீதி புனரமைப்பு நிதிக்கு பிரதேச சபைத் தலைவர் அனுமதி வழங்க மறுப்பதாக மக்களிடம் தெரிவித்து, அவர்களைத் தவறாக வழிநடத்தி, பிரதேச சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடச் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் இலாபத்திற்கான முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள்
சில தனிப்பட்ட நபர்கள் அரசியல் இலாபம் கருதி இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், நிதி ஒதுக்கீடு தொடர்பான உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்குப் பதிலாகத் தவறான தகவல்களைப் பரப்புவது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமது பிரதேச சபையின் அபிவிருத்திப் பணிகள் எந்தவித பாரபட்சமுமின்றி முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட வெள்ளைத்தம்பி சுரேஸ்குமார், சபையின் 20 உறுப்பினர்களுக்கும் சமமான நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மட்டத்தில் சமத்துவமான நிதிப் பகிர்வை உறுதிப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், முழு நாட்டையும் நிர்வகிக்கும் மத்திய அரசாங்கமும் அனைத்து பிரதேசங்களுக்கும் நியாயமான முறையில் அபிவிருத்தி நிதியை ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவரும் ஆளுங்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினரும் அரச அதிகாரிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, இன வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களுக்கும் சமமான அபிவிருத்தி வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள் நியாயமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri