அரசின் செயல் இலங்கையில் தமிழர்கள் வாழவில்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது: இரா.துரைரெட்னம்
தமிழர் பகுதிகளில் உள்ள தொல்பொருட்களைத் தமிழர்கள் பாதுகாப்பார்கள். முடியுமானால் தென் பகுதியில் உள்ள தொல்பொருட்களைப் பாதுகாக்க இராணுவத்தினரையும் பொலிஸாரையும் கொண்டு காவலரண் அமைத்து பாதுகாருங்கள் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
ஒரு நாடு ஒரே சட்டம் என்னும் செயலணியை உருவாக்கி அதற்குத் தலைவராகப் பௌத்த வெறித்தனமுள்ள ஒரு மதகுருவை நியமித்தது என்பது இலங்கையில் பல மொழி, பல கலாச்சாரம், பல இனங்கள் வாழவில்லை என்ற தோற்றப்பாட்டை நிலைநாட்டக் கூடியதாக இருக்கின்றது.
இது தமிழ் மக்கள் தொடர்பில் பாரிய ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த செயலணி முழு நாட்டிற்கும் சேவை செய்யக் கூடிய செயலணி என்ற தோற்றப்பாட்டுடன் அமைக்கப்பட்டு பௌத்த வெறித்தனம் கொண்டவரைத் தலைவராக நியமித்தது மட்டுமல்லாமல் எந்தவொரு தமிழரையும் அதில் நியமிக்காததென்பது இலங்கையில் தமிழர்கள் வாழவில்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.
இந்த அரசு மீண்டும் தமிழர்களுக்கெதிரான துரோகத்தினைச் செய்திருக்கின்றது. எனவே இந்தச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அமெரிக்காவில் ஒருங்கிணைந்த தமிழ் குழுக்கள் என்ற குழுவொன்றை உருவாக்கி அந்தக் குழு இலங்கையில் அமுல்ப்படுத்தப்படுகின்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடக முன்வைக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றில் சட்டவாக்கம் செய்யப்பட்ட 13வது திருத்தச் சட்டம் தொடர்பான விடயங்களை முழுமையாக அமுல்ப்படுத்தும் படியாக இந்தியா கோரிக்கை விடக் கூடாது எனக் கடந்த வாரம் அறிக்கை விட்டுள்ளதாக செய்திகளூடாக அறியக் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட அந்தக் குழு அவ்வாறு சொல்வது அவர்களது கருத்தாக இருக்கலாம். ஆனால், இலங்கையில் சிறுபான்மையினர் மட்டுமல்லாது இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமாக 13வது திருத்தத்தில் சட்டவாக்கம் செய்யப்பட்ட விடயத்தை மிக இலகுவாகச் செயற்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
அது மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு குறைந்தளவிலேனும் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடியவாறு இருப்பது முப்பது வருடப் போராட்டத்திற்குக் கிடைத்த ஒரு சிறு வெற்றியாக மாத்திரம் இல்லாமல் எமது மக்களுக்குக் கிடைத்த ஒரு நன்மையாகவே இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட அந்தக் குழு மீள்பரிசீலனை செய்து 13வது திருத்தத்தை இலகுவாக்குவதற்கு முறையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத்துறையின் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்குக் கணிசமானதொரு பங்களிப்பைச் செய்வதோடு உணவுப் பற்றாக்குறை இல்லாத ஒரு நிலைமையை உருவாக்கி வந்த பெருமையோடும் இருக்கின்றது.
எமது விவசாயிகள் கூடுதலாக அதிக விளைச்சல் மூலமே அந்தப் பெறுபேற்றை அடைந்திருக்கின்றார்கள். விவசாயத்துடன் தொடர்புபட்ட பொருட்களின் அதிக விலையேற்றத்துடன் அவர்களது வருமானத்தைச் சமன் செய்ய வேண்டுமாயின் இரசாயன உரப் பாவனை மூலமே அதிக விளைச்சலைப் பெற்று சமன் செய்கின்றார்கள். இந்த விடயத்தில் இரசாயன உரம் பாவித்தே விவசாயிகள் அதிக விளைச்சல்களைப் பெறுகிறார்கள் என்பதை யாரும் மறக்க முடியாது.
அரசாங்கங்கள் அதனை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ற திட்டங்களை அமுல்ப்படுத்தியதன் கரணமாகவே விவசாயிகள் அதிக விளைச்சலைப் பெற்றார்கள். ஆனால், இன்றைய சூழலில் ஜனாதிபதி சடுதியாக இயற்கை உரம் பயன்படுத்த வேண்டும் என்ற விடயத்தைக் கொண்டு வந்துள்ளார். இந்த விடயத்திற்கு யாரும் எதிரானவர்கள் அல்ல.
ஆனால், விவசாயத்துறையைப் பொறுத்தவரையில் இது உடனடியாகச் சாத்தியமில்லாத விடயமாகும். படிப்படியாக இதனை அமுல்ப்படுத்தியிருந்தால் விவசாயிகள் அதனை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். திடீரென அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்து குறிப்பாக மட்டக்களப்பு மக்களுக்கென்றே அத்திட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது போன்றே இருக்கின்றது.
ஏனெனில் சிங்களவர்கள் பகுதிகளில் நூறு எக்கர் கணக்கான காணிகள் அவர்களுக்கு இல்லை. அங்கிருப்பவர்கள் பத்து பதினைந்து ஏக்கருக்கு உட்பட்ட காணிகளிலேயே விவசாயம் செய்கின்றார்கள். அவர்களுக்கு இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதற்கு இலகுவான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆனால் மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் கணிசமான காணி இருப்பதால் அவர்கள் வியாபார நோக்கத்துடனேயே விவசாயம் செய்யப்படுகின்றது.
வியாபார நோக்கத்தில் கூடுதல் இலாபம் பெற வேண்டுமாக இருந்தால் மானிய அடிப்படையில் இரசாயன உரம் பயன்படுத்துவதன் ஊடாகவே நல்ல விளைச்சலைப் பெற முடியும். எனவே எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள அறுவடையின் போது விவசாயிகளுக்கு ஏற்படவுள்ள நட்டங்களுக்கு அரசும் அரசுக்கு உடந்தையாக எமது மாவட்டத்தில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் (Santhirakanthan), இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (Viyalenthiran) அவர்களுமே பொறுப்புக் கூற வேண்டும்.
இவர்கள் இந்த விடயத்தில் ஆமா சாமி போடுவதென்பது விவசாயிகளுக்குச் செய்கின்ற துரோகமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் தமிழர்களின் போராட்டத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்மந்தப்பட்டவர்கள்.
அவர்கள் ஒரு விரக்தி நிலையில் இருக்கின்ற காரணத்தினாலும், அவர்கள் வெகுஜனப் போராட்டத்தை முன்வைப்பதில் கசப்பான அனுபவத்தைப் பெற்றதன் காரணமாகவும் போராட்ட ரீதியாக எந்தச் சிந்தனைகளுக்கும் அவர்கள் உடனடியாகக் கால் வைப்பதில்லை. ஆனால் அவர்கள் போராட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல விவசாய அமைப்புகள் திட்ட முகாமைத்துவக் குழுக்கள் இருந்தும் அதற்கேற்ற வகையில் அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்ற கருத்தை இராஜாங்க அமைச்சர் தெரிவித்ததாகச் செய்திகள் ஊடாக அறிந்தோம். ஆனால், இந்த விடயத்திற்கு விவசாய அமைப்புகள் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும். இருப்பினும், எந்தவொரு விவசாய அமைப்பும் தற்போது உடனடியாக அமுல்ப்படுத்தப்படுகின்ற இயற்கை உர திட்டத்தை ஏற்றக் கொள்ளவில்லை.
இதன் விளைவுகளை எதிர்காலத்தில் இந்த அரசாங்கம் சந்தித்தே ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் என்ற போர்வையில் பல இடங்களில் அடையாளப்படுத்தப்பட்டு எல்லைக்கல் இடும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தில் 18இடங்களுக்கு மேல் தொல்பொருள் இடங்கள் உள்ளன.
அந்த இடங்களை எல்லைக்கல் இட்டு பௌத்த மதகுருக்கள் சென்று அவற்றினை பௌத்த இடங்களாக அடையாளப்படுத்தும் முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.மட்டக்களப்பில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பௌத்தர்களுக்குரியது என திணிக்க முற்படும்போது தமிழ் மக்களை சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலையினை உருவாக்கியவர்கள் இந்த பௌத்த குருமார்களாகும். தொல்பொருள் என்பது வரலாற்று ரீதியான பகுதிகள் அதனைப் பாதுகாக்கவேண்டிய கடமை தமிழ் மக்களுக்கும் உள்ளது.
தொல்பொருளைப் பாதுகாக்க வேண்டியவர்கள் அப்பகுதியில் உள்ள மக்கள்.கடந்த காலத்தில் தமிழ் மக்கள் அதனைப் பாதுகாத்திருக்கின்றார்கள், பாதுகாப்போம். அதனைவிடுத்து இராணுவத்தினரைக்கொண்டு பாதுகாப்பு அரண் அமைத்து தொல்பொருளைப் பாதுகாப்பது என்றால் அதனை ஏன் சிங்களப்பகுதியில் செய்யவில்லை.
தென்னிலங்கையில் அவ்வாறான பல பகுதிகள் உள்ளன. முடியுமானால்
இராணுவத்தினரையும் பொலிஸாரையும் கொண்டு பாதுகாப்பு அரண்களை அமைத்து அங்கு அதனை
பார்க்கமுடியுமா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
