நாட்டின் பொருளாதார மீட்சிப் பயணத்தை அரசு வெற்றிகரமாக முன்னெடுக்கும்! மகிந்த ஜயசிங்க
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எத்தகைய சலசலப்புகளை ஏற்படுத்தினாலும் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் மறுமலர்ச்சிக்கான பயணத்தை அரசு உறுதியுடன் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் என்று தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தொடரும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதங்களில் முறையாகப் பங்கேற்காமல், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பழைய பொருளாதாரக் கொள்கைகளையே அரசு பின்பற்றுகின்றது என்று தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நாட்டின் பொருளாதாரம்
கடந்த 76 ஆண்டுகளாகச் சீரழிந்துள்ள நாட்டைத் தற்போதைய அரசு மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றது. இது குறுகிய காலத்தில் சாத்தியமில்லை என்றாலும், அதனை அடைவதற்கான சரியான பொருளாதாரப் பாதையில் அரசு தற்போது பிரவேசித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதை முதன்மை இலக்காகக் கொண்டே 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கான வரவு - செலவுத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் எதிர்பார்க்கப்பட்ட அரச வருமான இலக்குகளை அரசு வெற்றிகரமாகத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டில் 4 ஆயிரத்து 900 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திறம்படச் செயற்பட்டு 5 ஆயிரத்து 200 பில்லியன் ரூபா வரி வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
அதேபோன்று, நடப்பு ஆண்டின் முதல் 10 மாதங்கள் நிறைவடையும்போதே, சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களங்கள் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட வரி வருமான இலக்குகள் அனைத்தையும் தாண்டிச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
வரவு - செலவுத் திட்டம்
கடந்த பல தசாப்தங்களின் பின்னர் (1965ஆம் ஆண்டுக்குப் பின்னர்) நாட்டின் முதன்மை வரவு - செலவுத் திட்ட இடைவெளியை 2.3 சதவீதம் வரை கணிசமாகக் குறைப்பதற்குத் தற்போதைய அரசு தயாராகியுள்ளது.
அரச செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக 160 மக்கள் பிரதிநிதிகளின் சிறப்புரிமைகள் மற்றும் செலவுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ள போதிலும், மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகபட்ச நிவாரணங்கள் எவ்விதக் குறைவுமின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், நாட்டில் தற்போது 80:20 என்ற விகிதத்தில் காணப்படும் மறைமுக மற்றும் நேரடி வரிகளின் அமைப்பை, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கமையப் படிப்படியாக 60:40 என்ற விகிதத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ள தற்போதைய சூழலில், நாட்டை ஒரு புதிய மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி இட்டுச் செல்வதற்கான அடுத்தகட்ட நகர்வாகவே இந்த வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த திட்டம்
2025, 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளுக்கான வரவு - செலவுத் திட்டங்கள் அனைத்தும் சங்கிலித் தொடர் போன்று ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட ஒருங்கிணைந்த திட்டங்களாகும்.

கல்வி, சுகாதாரம், எரிசக்தி, வீதிப் போக்குவரத்து மற்றும் விளையாட்டுத்துறை என அனைத்து முக்கிய துறைகளையும் உள்ளடக்கிய வகையில் தேசியக் கட்டமைப்பு மாற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்துக்குள் எந்தவொரு சலசலப்பையோ கூச்சலையோ எழுப்பினாலும், நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் மறுமலர்ச்சிக்கான இந்தப் பயணத்தை அரசு உறுதியுடன் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் எனவும் குறிப்பிட்டார்.
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam