ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய நாளைய தலைவர்களை உருவாக்குதல் திட்டம்: வடக்கு ஆளுநர்
எதிர்காலத்தில் இந்த நாட்டை சிறந்த தலைமைத்துவப் பண்புள்ளவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாகவே 'நாளைய தலைவர்களை உருவாக்குதல்' திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் 'நாளைய தலைவர்களை உருவாக்குதல்' (NEXTGEN LEADERS) தேசிய வேலைத்திட்டத்தின் வட மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இன்று காலை (30.10.2025) நடைபெற்றிருந்தது.
மாணவர்களின் மனப்பாங்கு மற்றும் தலைமைத்துவத்தை விருத்தி செய்வது தொடர்பான இந்த செயற்றிட்டத்தின் கீழ் 8 பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தலைமைத்துவப் பண்புகள்
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு நிறுவனத்தின் வெற்றியும் தோல்வியும் அந்த நிறுவனத்தின் தலைவரின் தலைமைத்துவப் பண்பில்தான் தங்கியிருக்கின்றது. இன்று பல திணைக்களங்களின் தலைவர்களிடத்தில் சிறந்த தலைமைத்துவத்தைக் காண முடியவில்லை.
ஒரு வேலையை எவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சிந்திப்பதைவிட அதைச் செய்யாமல் விடுவதற்கான காரணங்களைத் தேடுபவர்களாகவே சில திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளனர்.
அடுத்த தலைமுறைக்கான பண்பு
சேவைபெற வருபவர்கள் எமது மக்கள் என்று அந்தத் தலைவர்கள் சிந்திப்பதில்லை. அவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று நினைப்பதில்லை. இவற்றையெல்லாம் மாற்றியமைக்க வேண்டுமாக இருந்தால், அடுத்த தலைமுறையாவது மிகச் சிறந்த தலைமைத்துவப் பண்புடன் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
புத்தாக்க சிந்தனையையும் தலைமைத்துவப் பண்பின் ஊடாக நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எங்கள் மக்களுக்காக எவ்வாறான விடயங்களைப் புதிதாகச் செய்யலாம், அதன் ஊடாக அவர்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என சிந்திக்கின்ற தலைவர்களாக நீங்கள் உருவாகவேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.






