“கோட்டாபயவின் அடுத்த மூன்று ஆண்டுகள்” நிறைவேறுமா மக்களின் எதிர்பார்ப்பு?
இரண்டு ஆண்டுகள் தோல்வியடைந்த நிலையில், இலங்கை அரசாங்கம், வழங்கியுள்ள மூன்று ஆண்டுகளுக்கான உறுதிமொழிகள், நிறைவேற்றப்படுமா? என்பது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்தும் சந்தேகம் எழுந்துள்ளமையை பொதுவாக உணரமுடிகிறது.
எனினும் அரசாங்கம், எவ்வாறு இந்த உறுதிமொழியை வழங்குகிறது என்பதை பொதுமக்கள் சந்தேகத்துடன் நோக்குகின்றனர்.
அந்த சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது.
ஏனைய நாடுகளை எடுத்துக்கொண்டால், இலங்கையை விட அந்த நாடுகளுக்கு பிரச்சினைகள் குறைவாகவே உள்ளமையை எம்மால் உணரமுடியும்.
இலங்கையை போன்ற நாடான பங்களாதேஸை எடுத்துக்கொண்டால், அந்த நாடு இன்று பொருளாதாரத்தில், இலங்கைக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டதை அவதானிக்கமுடிகிறது.
டென்மார்க் அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சின் தகவல் சேகரிப்பின்படி பங்களாதேஸின் பொருளாதாரம் முன்னரை விட முன்னேற்றம் அடைந்துள்ளது.
வர்த்தகம், விவசாயம் மற்றும் கைத்தொழில் என்ற பல விடயங்களிலும் சில மாற்றங்களையே அந்த நாடு காணவேண்டியுள்ளது.
எனினும் கல்வியில் அந்த நாடு பாரிய முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. அதுவும் ஆரம்ப பெண்கள் கல்வி முறையில் பங்களாதேஸ் சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறது.
எனவே இலங்கையுடன் ஒப்பிடுகையில் பங்களாதேஸூக்கு பாரிய பிரச்சினைகள் இருப்பதாக தெரியவில்லை.
அத்துடன் அங்கு நடைமுறைப்படுத்தப்படும் கொள்கை ரீதியான செயற்திட்டங்களை உலகின் பல நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
எனினும் இலங்கையை எடுத்துக்கொண்டால், இங்கு அடிப்படையில் தேசியக் கொள்கை ஒன்று இல்லை.
அத்துடன் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பார்த்தால், எந்த பிரச்சினையும் உள்நாட்டிலேயே தீ்ர்க்கக்கூடிய நிலையில் இல்லை என்றே கூறவேண்டும்.
அனைத்து பிரச்சினைகளுக்கும் வெளிநாடுகளை நம்பியிருக்கவேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலையே இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கையை பொறுத்தவரை,இனப்பிரச்சினை தீர்வில் அது, முதல் அடியைக்கூட எடுத்து வைக்கவில்லை.
பொருளாதாரத்தில் “நாளாந்த கூலி“ பொருளாதாரத்தை ஒத்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
கல்வியில் இன்னும் பொதுக்கொள்கைக்கு இலங்கை தயாராகவில்லை.
சுகாதாரத்தில் ஓரளவான முன்னேற்றத்தை கண்டுள்ளது.
கலாசாரத்தில் பின்னோக்கிய நகர்வையே காணமுடிகிறது.
சமூக ஒற்றுமை, நல்லிணக்கம் என்பவற்றில் பின்னடைவான நிகழ்வுகளே நிகழ்கின்றன.
பெண்களுக்கான சமவுரிமை விடயத்தில் பாரிய முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஆக மொத்தத்தில் இலங்கை அனைத்து விடயங்களிலும் அடிப்படையில் இருந்து தேசிய கொள்கை ஒன்றின் மூலம் முன்னேறவேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கம், தம்முன் உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப்போகிறது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் உள்ளது.
பொதுவான தோற்றப்பாட்டில் பார்க்கும்போது, நாடு இன்று எதிர்கொள்ளும் பிரச்சினையை தீர்க்கவேண்டுமாயின் தேசிய கொள்கை ஒன்றுக்கான வழிமுறைகளை, இலங்கை அரசாங்கம் யோசிக்கவேண்டும்.
இலங்கையில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள், பொதுவாக நீண்டகால தீர்வுகளை முன்வைக்காமல், குறுகிய கால தீர்வுகளையே முன்வைக்கின்றன.
இதற்கான காரணம், தமது அதிகாரத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டு அடுத்த தேர்தலிலும் வென்றுவிடவேண்டும் என்று நோக்கமாகும்.
மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அமைகின்ற அரசாங்கங்கள், எப்போதும் சில பிரச்சினைகளுக்கு நீண்ட கால தீர்வுகளை காணமுனைகின்றபோது, அது மக்கள் மத்தியில் தாக்கங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, அந்த ஆட்சி நீடிக்காமல் போய் விடுகிறது.
இலங்கை மக்களின் உடனடித் தேவைகள் இங்கு பூர்த்திச்செய்யப்படாமை காரணமாகவே, ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சி நீடிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போது குறுகிய காலத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டு மக்களுக்கு முன்னால் அபிவிருத்தி போன்ற பிம்பம் காட்டப்படுவதன் காரணமாக, அந்த ஆட்சியை மக்கள் குறிப்பாக பெரும்பான்மை மக்கள் விரும்பி வந்தனர்.
ஆனால் இன்று அந்த நிர்வாக முறையில் ஏற்பட்ட வீழ்ச்சி, நாட்டை பாரியளவில் உலுக்கிக்கொண்டிருக்கிறது.
ஆகவே நாட்டை ஆட்சி செய்து வந்த இரண்டு கட்சி அரசாங்கங்களும் தோல்வி கண்டுள்ளமையால், தற்போது மூன்றாவது வகையான கொள்கை ஆட்சி ஒன்று அவசியப்படுகிறது.
இந்த ஆட்சி தனியே ஒருக்கட்சியினால் ஏற்படுத்தக்கூடிய ஆட்சியாக இருக்கமாட்டாது.
மாறாக, ஏற்கனவே 2015ம் ஆண்டு அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் சேர்ந்து ஏற்படுத்துகின்ற ஆட்சியே இலங்கைக்கு பொருத்தமானதாக இருக்கும்.
இதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றபோதும், அந்த நகர்வு கூட, முழுமையாக உள்நாட்டு முயற்சியாக இருக்கப்போவதில்லை.
நிச்சயமாக வெளிநாடு ஒன்றின் தலையீடு இருக்கவே செய்யும்.
எனினும் பூகோள அரசியலில் இதனை தவிர்க்கமுடியாது என்ற நிலையில், இலங்கைக்கு ஏற்ற அரசியல், பொருளாதார, மற்றும் சமூக காரணிகளுக்கான தேசியக்கொள்கைகள் உருவாக்கப்பட்டு அது நிலையான இலங்கையின் ஆட்சிக்கு வழிவகுத்தால், அதுவே சிறப்பான இருக்கும்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
