தோல்வியை ஏற்றுக்கொண்ட கோட்டாபய - மாற்றத்தை ஏற்படுத்த தயார் நிலையில்
நாட்டு மக்களின் தொடர் போராட்டம் காரணமாக பிடிவாதத்தை கைவிட்டு, ஆர்ப்பாட்டக்காரர்களை சமாதானப்படுத்துவதற்காக அரசமைப்பில் மாற்றங்களை செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய தயார் நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகமான புளும்பேர்க் தகவல் வெளியிட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரத்தின் முழுமையான அதிகாரங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம், தேசிய பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறியுள்ள நிலைமையிலேயே இது இடம்பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை சரியான பாதையில் இட்டுச்செல்வதும், இளைய தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதும் அரசாங்கத்தின் கடமை என நேற்று புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதிஉயர் அரசமைப்பை மதிக்கும் அதேவேளை எதிர்காலத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய தேவையேற்பட்டால் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கவேண்டிய தேவையேற்பட்டால் நான் தியாகங்களை செய்வதற்கு தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கோத்தபாய ராஜபக்சவின் உரை அவரது நீண்டபிடிவாதம் தளர்ந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு பின்னர் பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதில் பிரதமர் அரசியலமைப்பு மாற்றங்களை அமைச்சரவையில் முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்றுத்துறை சட்டவாக்கம் நீதித்துறை தொடர்பானதாக அது காணப்படும். பொதுமக்களின் நோக்கங்களை நிறைவேற்றும் என பிரதமர் கருதும் இந்த திருத்தங்கள் புதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் மிகவும் பரந்துபட்ட அதிகாரங்களை குறைக்க வேண்டும் என எதிர்கட்சியினரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் அரசியல் குற்றவியல் பிரேரணையையும் கொண்டுவர தீர்மானித்துள்ளது.
கோத்தபாயவின் சகாக்களும் எதிர்கட்சிகளும் அவரிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்-அரசமைப்பு மாற்றங்கள் மூலம்; ஜனாதிபதிக்கான முழுமையான அதிகாரங்களை நீக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு சட்டவாக்க அதிகாரமும் உள்ளது பல அரசியல் தரப்புகள் அரசமைப்பு மாற்றம் குறித்து அறிக்கைகளை வெளியிடுகின்றன.
நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்து நிறைவேற்றுவதற்கான வாய்ப்புள்ளது என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. தான் பதவிவிலக வேண்டும் என்ற வேண்டுகோள்களும் கோரிக்கைகளும் அதிகரிக்கின்ற நிலையில் ஏன் தான் தொடர்ந்தும் பதவியில் இருக்கவேண்டும் என்பதையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொருளாதார சவாலக்களை வெற்றிகொள்வதற்கு நேச நாடுகளினதும் சர்வதேச நாணயநிதியத்தினதும் ஆதரவு அவசியம், அதற்கு அரசியல் ஸ்திரதன்மை அவசியம் என அவர் புதிய அமைச்சரவைக்கு தெரிவித்தார்.
