ஆர்ப்பாட்ட அலையை சிறு விளையாட்டுகளைக் காட்டி கோட்டாபயவினால் நிறுத்த முடியாது: இரா.சாணக்கியன்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட அலையைச் சிறு சிறு விளையாட்டுகளைக் காட்டி கோட்டாபயவினால் நிறுத்த முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் நினைவுத் தூபியில் நேற்று (29) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராமனை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம். அவர் கொல்லப்பட்டு 17 வருடங்களின் பின்னராவது காலிமுகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தில் அவரது கொலைக்கும், படுகொலை செய்யப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரி பதாகைகள் வைக்கப்பட்டது. ஆனால் பொலிஸாரினால் அண்மையில் அவை அகற்றப்பட்டிருந்தது.
கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் போதும், நினைவேந்தல்கள் செய்யும் போதும் பொலிஸார் வந்து காணொளி எடுப்பதை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை. பொலிஸார் என்று கூறி அறியாதவர்கள் கூட வந்து போட்டோ எடுப்பதைக் காணவில்லை.
ஆனால் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஒருவரின் நினைவு நிகழ்வில் ஊடகவியலாளர்களின் நடுவில் மறைந்திருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணொளி எடுக்கின்றார்.
நாங்கள் இன்று படுகொலை செய்யப்பட்ட தராகி சிவராமனுக்கு என்ன நடந்தது? அவரை யார் கொன்றார்கள்? அவருக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கேட்கின்ற நிலையில், அவ்வாறு கோரும் ஊடகவியலாளர்களை பொலிஸார் வந்து காணொளி எடுக்கின்றனர்.
முன்னர் பொலிஸார் வந்து சிறு சிறு கையடக்கத் தொலைபேசிகளில் காணொளி எடுப்பார்கள். தற்போது விலை கூடிய கமராக்களை வைத்திருக்கின்றார்கள். மக்களுக்கு உண்ணக் குடிக்க நாட்டில் பணம் இல்லாத நிலையில் பொலிஸாருக்கு பெறுமதியான கமராக்களை வாங்கிக் கொடுப்பதற்கு கோட்டாபய ராஜபக்சவுக்கு எங்கிருந்த பணம் வருகின்றதோ தெரியவில்லை.
இலங்கையில் ஒரு நாடு ஒரு சட்டம் இல்லை. ஒரு நாடு நூறு சட்டங்கள். அதிலும் வடக்கு கிழக்கை பொருத்தமட்டில் ஒரு நாடு ஓராயிரம் சட்டங்கள்.
நாட்டில் தற்போது அனைத்து இடங்களிலும் அனைவரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்ற நிலையில், ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்யும் முகமாக நீதிமன்றக் கட்டளையொன்று எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் நீதிமன்றத்தின் ஊடாகப் பார்த்துக் கொள்வோம்.
ஆனால், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட அலையை இவ்வாறான சிறு சிறு விளையாட்டுக்களைக் காட்டி கோட்டாபயவினால் நிறுத்த முடியாது. எனவே நான் மக்களிடம் கோரிக்கையொன்றை முன்வைக்கின்றேன்.
மட்டக்களப்பில் மாத்திரமல்ல நாடு பூராகவும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் சார்பாக மக்கள் அனைவரும் முன்னிற்க வேண்டும்.
சிவராமின் 18வது நினைவு நிகழ்வுக்குப் பின்னராவது அவரது படுகொலைக்கான நீதி கிடைக்க அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



