தேர்தலில் வெல்லாத ரணில் ஜனாதிபதியாவார் எதிர்பார்த்திருக்கவில்லை:69 லட்சம் வாக்குகளை பெற்ற கோட்டாபய தப்பிச் செல்ல நேரிட்டது-மைத்திரி
அரசாங்கம் ஆரம்பத்தில் கூறியபடி செயற்படாத காரணத்தினால், நேற்றைய தினம் அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்தது என அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பது சம்பந்தமான தயார் நிலையில் இருப்பதாக தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கம் அமைந்தால் மட்டுமே பிரச்சினைகள் தீரும்
சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காமல் நாட்டில் நிலவும் கஷ்டங்களில் இருந்து மீள முடியாது. இன்றும் நாங்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். சிண்டு முடிச்சு விடுவதற்கோ அரசாங்கத்தை வலுப்படுத்துவதற்கோ நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவதற்கு சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் இல்லை என்றால், நாடு நாளுக்கு நாள் கஷ்டங்களுக்கு உள்ளாகும் எனவும் பொருளாதார நிபுணர்கள் உட்பட தகுதி வாய்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதியிடம் இந்த யோசனையை முன்வைப்போம், அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். இதன் மூலம் இந்த யோசனைகளுக்கு அவரது பதில் என்ன என்பதை நாங்கள் அறிந்துக்கொள்ள முடியும்.
இதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற வகையில் எமது நடவடிக்கைகளை முன்னெடுக்க எண்ணியுள்ளோம். கட்சியிடம் கூறாது அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டவர்கள் தொடர்பில் எவ்வித வருத்தமும் இல்லை.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் 18வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மிகவும் பலமிக்க அரசருக்கு இருக்கும் பலத்துடன் கூடிய அரசாங்கம் இருந்தது.
எனினும் நான் 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்டு தெரிவான பின்னர் முழு ராஜபக்ச குடும்பமும் வீட்டுக்கு சென்றது.
ரணில் ஜனாதிபதியாக தெரிவாார் என நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை
ஒரு தேர்தல் தொகுதியில் கூட வெல்லாத ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்று நாங்கள் எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
எனினும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தேர்தல் தொகுதியில் கூட வெற்றிப்பெறாமல் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானார்.
69 லட்சம் வாக்குகளை பெற்ற கோட்டாபய நாட்டை விட்டு ஓட நேரிட்டது
அதேபோல் 69 லட்சம் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்ல நேரிட்டது.
கடந்த நாடாளுமன்றத்தில் 68 லட்சம் வாக்குகளை பெற்று 142 ஆசனங்களை கைப்பற்றிய பொதுஜன பெரமுனவின் பிரதமர் உட்பட அனைவருக்கும் பதவிகளில் இருந்து விலகி வீட்டுக்கு செல்ல நேரிட்டது.
அரசியல் உலகம் என்பது இப்படித்தான்.இதனால், நாட்டுக்காக எமது பங்களிப்பை எப்படி வழங்க முடியும் என்று நாங்கள் பார்க்கின்றோம் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.